ஆருத்ரா கோல்டு மோசடி வழக்கில் ஜாமீனில் வெளியே வந்த ரூசோ தலைமறைவாகிவிட்டார். அவரை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் தனிப்படை அமைத்து தேடி வருகிறார்கள்.
ஆருத்ரா கோல்டு டிரேடிங் பிரைவேட் லிமிடெட் என்ற தனியார் நிறுவனம் அதிக வட்டி தருவதாக கூறி பொதுமக்களிடம் இருந்து ரூ 2,438 கோடி ரூபாய் முதலீட்டை பெற்றதாக தெரிகிறது. இதையடுத்து இந்த நிறுவனம் சொன்னது போல் பணத்தை தரவில்லை.
இதையடுத்து புகாரின் பேரில் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பாக அந்த நிறுவனத்தில் இயக்குநர்களில் ஒருவரான பாஜக நிர்வாகி ஹரீஷ், இயக்குநர்கள் பாஸ்கர், மோகன்பாபு, நடிகர் ரூசோ உள்ளிட்டோரும் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ரூசோவுக்கு கடந்த ஆண்டு ஜனவரி மாதம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது நிதி நிறுவன மோசடி வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம். இந்த நிலையில் ரூசோவுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யக் கோரி பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் சென்ன ஹைகோர்டில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த வழக்கு கடந்த மாதம் 20ஆம் தேதி நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர், “ரூசோ மோசடி செய்துள்ளார். அவரை ஜாமீனில் விடுவித்தது தவறு, அவர் ஜாமீனில் வெளியே இருப்பதால் சாட்சிகளை கலைத்துவிடுவார்.
பாதிக்கப்பட்ட பலர் புகாரளிப்பதை இந்த ஜாமீன் நடவடிக்கை தடுக்கும் வகையில் உள்ளது. எனவே அவருக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்ய வேண்டும்” என தெரிவித்துள்ளார் அப்போது ரூசோ தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், காவல் துறையின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி வருவதால் ஜாமீனை ரத்து செய்யக் கூடாது என வாதம் செய்தார்.
இதையடுத்து இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, ரூசோவுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்து உத்தரவிட்டார். மேலும் 3 நாட்களில் விசாரணை நீதிமன்றத்தில் ரூசோ சரணடைய வேண்டும் என்றும் இல்லாவிட்டால் அவரை கைது செய்யுங்கள் என காவல்துறைக்கு நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.
இந்த நிலையில் ஜாமீனில் வெளியே வந்த ரூசோ தற்போது தலைமறைவாகியுள்ளார். அவரை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் தனிப்படை அமைத்து தேடி வருகிறார்கள்.