
திசையன்விளையில் லாரி டிரைவர் வெட்டிக்கொலை
நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள தெற்கு ஏரந்தை பகுதியை சேர்ந்தவர் தேவபாலன் (வயது 50). லாரி டிரைவர்.
இவர் இன்று காலை அப்பகுதியில் உள்ள அம்மன் கோவில் ஓடையில் வெட்டிக்கொலை செய்யப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார்.
அவரது தலை, கழுத்து உள்ளிட்ட இடங்களில் சரமாரியாக வெட்டப்பட்ட காயங்கள் இருந்தது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் மற்றும் போலீசார் விரைந்து சென்றனர்.
அவர்கள் தேவபாலன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர்.
கொலை செய்யப்பட்ட தேவபாலன் மீது கடந்த 2017-ம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்தவர் துரைபாண்டி என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கு இருந்தது.
இந்த வழக்கில் குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்த அவர் பின்னர் விடுதலையானதாக கூறப்படுகிறது.இந்நிலையில் அப்பகுதியை சேர்ந்த ஒருவர் நேற்று இறந்துள்ளார்.
அந்த வீட்டிற்கு துரைபாண்டியின் உறவினர்கள் சிலர் வந்துள்ளனர்.
இந்நிலையில் தேவபாலன் கொலை செய்யப்பட்டிருப்பது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.
பழைய வழக்கு தொடர்பான முன்விரோதத்தில் பழிக்குப்பழியாக தேவபாலன் கொலை செய்யப்பட்டரா? அல்லது வேறு ஏதேனும் தகராறு காரணமாக தேவபாலன் கொலை நடந்ததா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
