
பைக் டாக்ஸியில் சென்ற இளம்பெண்ணுக்குப் பாலியல் தொல்லை – இளைஞர் கைது!
சென்னை அடையாறு காவல் மாவட்டத்தில் வசித்து வருபவர் கீதா (33) (பெயர் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது). இவர் கடந்த 19.3.2024-ம் தேதி இரவு பைக் கால் டாக்ஸி மூலம் கிண்டியிலிருந்து கொட்டிவாக்கத்துக்குச் செல்ல முன்பதிவு செய்தனர். அப்போது பைக்கை நடனசபாபதி என்பவர் (22) ஓட்டினார். கொட்டிவாக்கத்தில் கீதாவை இறக்கிவிட்ட பிறகு வாடகை பைக்குக்கான கட்டணத்தை அவர் நடனசபாபதியிடம் கொடுத்தார். அப்போது திடீரென நடனசபாபதி, கீதாவுக்கு பாலியல் தொல்லைக் கொடுத்தார். அதனால் அதிர்ச்சியடைந்த கீதா சத்தம் போட்டார். அதையடுத்து கீதாவை மிரட்டிய நடனசபாதி, அங்கிருந்து பைக்கில் தப்பிச் சென்றுவிட்டார்.
இதுகுறித்து கீதா, நீலாங்கரை காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து சம்பவம் நடந்த இடத்துக்குச் சென்று அங்குள்ள சி.சி.டி.வி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அதோடு நடனசபாபதியை விசாரணைக்கு அழைத்து போலீஸார் விசாரித்தனர். விசாரணைக்குப் பிறகு நடனசபாபதியை போலீஸார் கைதுசெய்ததோடு அவரிடமிருந்து செல்போன், பைக் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நடனசபாபதி, புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
