திருடுவது ஆட்டோவில்;தப்புவது பைக்கில்" - ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்த சென்னைக் கொள்ளையர்கள்
அதிகாலை 2 மணிக்கு ஆட்டோவில் சென்று பைக்குகளைத் திருடுவோம். கையோடு ஹெல்மெட்டையும் எடுத்துச் செல்வோம். பின்னர் திருடிய பைக்குகளில் சென்று வழிப்பறிச் சம்பவங்களில் ஈடுபடுவோம்” என்று மூன்று கொள்ளையர்கள் போலீஸாரிடம் கூறியுள்ளனர்.
சென்னை துரைப்பாக்கம் குமரன் குடில் 6-வது குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் ரஞ்சித். இவர் ஐ.டி ஊழியராகப் பணியாற்றிவருகிறார். இவர், துரைப்பாக்கம் காவல் நிலையத்தில் தன்னுடைய பைக்கை கடந்த நவம்பர் மாதம் 23-ம் தேதி நள்ளிரவு ஆட்டோவில் வந்த கும்பல் திருடிச் சென்றதாகப் புகார் கொடுத்தார். அதற்கு ஆதாரமாக சிசிடிவி பதிவையும் போலீஸாரிடம் காண்பித்தார். அதன் அடிப்படையில் துரைப்பாக்கம் போலீஸார் விசாரணை நடத்தினர்.இந்தநிலையில் டிசம்பர் 7-ம் தேதி துரைப்பாக்கம் குமரன் குடில் 6-வது தெருவைச் சேர்ந்த நடேசன் என்பவரின் பைக்கும் டிசம்பர் 15-ம் தேதி சாந்தி நிகேதன் காலனி, சுப்ராயன் நகரில் குடியிருக்கும் அப்பாஸ் என்பவரின் பைக்கும் அடுத்தடுத்து திருடப்பட்டன. இதுதொடர்பான புகாரின் பேரில் துரைப்பாக்கம் உதவி கமிஷனர் லோகநாதன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீஸார் பைக் திருடப்பட்ட இடங்களில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அப்போது மூன்று இடங்களிலும் ஆட்டோவில் வந்த கும்பல் ஒரே ஸ்டைலில் பைக்குகளைத் திருடியது தெரிந்தது.இதையடுத்து ஆட்டோவின் பதிவு நம்பரை வைத்து பைக் திருடும் கும்பலை போலீஸார் அடையாளம் கண்டனர். அவர்களைப் பிடித்த போலீஸார் 3 விலை உயர்ந்த பைக்குகளைப் பறிமுதல் செய்தனர். விசாரணையில் அவர்களின் பெயர் கரண்குமார் (21), அஜித்குமார் (23), கோட்டீஸ்வரன் (21) எனத் தெரியவந்தது. கண்ணகி நகரைச் சேர்ந்த இவர்கள் மூன்று பேரும் நெருங்கிய நண்பர்கள். புதுப்பேட்டையில் குடியிருந்த இவர்கள், தற்போது கண்ணகி நகரில் குடியிருந்துவருகின்றனர். மூன்று பேரிடம் விசாரணை நடத்தியபோது ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்க மூன்று கொள்ளையர்களும் திட்டமிட்டிருந்தது தெரியவந்தது.ஆட்டோவில் சென்று பைக்குகளைத் திருடும் இவர்கள் சிக்கியது எப்படி என்று போலீஸார் கூறுகையில், துரைப்பாக்கம் காவல் நிலையத்துக்குட்பட்ட பகுதியில் தொடர்ச்சியாக பைக்குகள் திருடப்பட்டதும் 150-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தோம். அப்போது ஆட்டோவில் அதிகாலை நேரத்தில் வரும் கும்பல், ஒரு மணி நேரத்தில் பைக்கைத் திருடிவிட்டு தப்பிச் செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தன. பைக்குகளைத் திருடப் பயன்படுத்தும் ஆட்டோ யாருடையது என்று விசாரித்தபோது கண்ணகி நகரைச் சேர்ந்த பெண் ஒருவருக்குச் சொந்தமானது என்று தெரிந்தது.அந்தப் பெண்ணிடம் விசாரித்தபோது அவருக்கும் திருட்டுச் சம்பவத்துக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்று தெரியவந்தது. அதே நேரத்தில் அந்தப் பெண்ணின் உறவினரான கோட்டீஸ்வரன், வாடகை அடிப்படையில் ஆட்டோவை ஓட்டிவந்தது தெரிந்தது. அதனால் கோட்டீஸ்வரனிடம் விசாரித்தபோது அவர், பைக் திருடுவதை ஒப்புக் கொண்டார். கோட்டீஸ்வரனின் நண்பர்கள் அஜித்குமார், கரண்குமார் ஆகியோர் சேர்ந்து பகலில் துரைப்பாக்கம் பகுதியில் நோட்டமிடுவார்கள்.பின்னர், அவர்கள் அதிகாலை 2 மணியளவில் ஆட்டோவில் அங்கு செல்வார்கள். ஆட்டோவை நிறுத்திவிட்டு விலை உயர்ந்த பைக்கின் சைடு லாக்கை உடைப்பார்கள். பிறகு மெயின் லாக்கையும் உடைத்துவிட்டு அந்த பைக்கை யாராவது ஒருவர் ஓட்டிக்கொண்டு வந்துவிடுவார். இதற்காக கையோடு அவர்கள் ஹெல்மெட்டையும் எடுத்துச் செல்வார்கள். திருடிய பைக்குகளில் சென்று செயின்பறிப்பு, செல்போன் பறிப்புச் சம்பவங்களில் ஈடுபடுவார்கள். அப்போது பைக்கின் நம்பரைக் கொண்டு விசாரித்தால் அது ஏற்கெனவே திருடப்பட்டது என்று தெரியவரும். இப்படியே இவர்கள் மூன்று பேரும் காவல் துறையினரிடமிருந்து எஸ்கேப் ஆகி வந்துள்ளனர்.வழிப்பறிச் சம்பவங்களில் ஈடுபட்ட பிறகு அந்த பைக்குகளை புதுப்பேட்டையில் விற்கவும் இந்தக் கும்பல் முடிவு செய்துள்ளது. அதற்குள் போலீஸார், 3 பேரையும் கைது செய்துவிட்டனர். 7-ம் வகுப்பு வரை படித்த அஜித்குமார் மீது அடையாறு காவல் நிலையத்தில் வழிப்பறி வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதுபோல 8-ம் வகுப்பு வரை படித்துள்ள கரண்குமார் மீது நீலாங்கரை காவல் நிலையத்திலும் 5-வது வரை படித்த கோட்டீஸ்வரன் மீது திருவள்ளூரிலும் வழிப்பறி வழக்குகள் உள்ளன. கோட்டீஸ்வரன் மீது கண்ணகிநகர் காவல் நிலையத்தில் கொலை முயற்சி வழக்கு உள்ளது.கடந்த சில மாதங்களுக்கு முன் ஜெயிலிலிருந்து வெளியில் வந்த மூன்று பேரும் கஞ்சா, மது போதைக்காக மீண்டும் பைக் திருட்டு, செயின், செல்போன் பறிப்புச் சம்பவங்களில் ஈடுபட்டுள்ளனர். இந்த மூன்று பைக்குகளை புதுப்பேட்டை அல்லது டூப்ளிக்கேட் ஆவணங்கள் தயாரித்து விற்கவும் இந்தக் கும்பல் திட்டமிட்டுள்ளது. அதற்குள் மூன்று பேரையும் பிடித்து திருடப் பயன்படுத்திய ஆட்டோவையும் பறிமுதல் செய்துள்ளோம்" என்றனர்.போலீஸாரிடம் மூன்று பேரும்,
ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் உள்ள பைக்குகளைத்தான் குறி வைத்து திருடுவோம். அந்தப் பைக்கில் பந்தாவாகப் பகலில் செல்வோம். தனியாக நடந்து செல்பவர்களிடமிருந்து செல்போன், செயின்களை வழிப்பறி செய்து அந்தப் பணத்தில் அன்றைய தினம் ஜாலியாக இருப்போம்” என்று கூறியுள்ளனர்.
போலீஸ் நியூஸ் செய்தியாளர் திரு சந்தோஷ் அம்பத்தூர்