ஆசிரியர் வேலை வாங்கி தருவதாக ரூ.36.13 கோடி மோசடி செய்தவர் கைது
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் முப்பிலிவெட்டி பகுதியை சேர்ந்த பொன்ராஜ் மனைவி சண்முகலட்சுமி(33).
இவரிடம் ஆறுமுகநேரி பாரதிநகரை சேர்ந்த ஜெயபால் மகன் பாலகுமரேசன்(46) மற்றும் சிலர், தாங்கள் நடத்தி வரும் தொண்டு நிறுவனத்தில் பணம் டெபாசிட் செய்தால் நல்ல சம்பளத்தில் அரசு பள்ளிகளில் ஆசிரியர் வேலை வாங்கி தருவதாக கூறியுள்ளனர்.
இதனை நம்பிய சண்முகலட்சுமி ரூ.5 லட்சத்தை டெபாசிட் செய்துள்ளார்.
ஆனால் அரசு பள்ளி ஆசிரியர் வேலையை வாங்கித் தராமல் தொண்டு நிறுவனத்தினர் மோசடி செய்துள்ளனர்.
இதுகுறித்து சண்முகலட்சுமி அளித்த புகாரின் பேரில் தூத்துக்குடி குற்றப் பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து நேற்று முன்தினம் பாலகுமரேசனை கைது செய்தனர்.
விசாரணையில், பாலகுமரேசன் சென்னை உள்பட தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் தனது தொண்டு நிறுவனத்தின் மூலம் 1,315 பேரிடம் ஆசிரியர் வேலை வாங்கித் தருவதாக கூறி மொத்தம் ரூ.36 கோடியே 13 லட்சம் மோசடி செய்தது தெரிய வந்தது.