
செங்கல்பட்டில் பைக் திருடன் அதிரடி கைது
செங்கல்பட்டில் தொடர் பைக் திருட்டில் ஈடுபட்டு வந்தவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். செங்கல்பட்டு ரயில் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் பைக் திருட்டு அதிகரித்து வருவதாக செங்கல்பட்டு டவுன் போலீசாருக்கு புகார்கள் வந்தன.
இதையடுத்து, போலீசார் அப்பகுதியில் நேற்று ரோந்து சென்றனர். அப்போது, சந்தேகத்திற்கு இடமாக நின்றிருந்தவரை பிடித்து விசாரித்தனர். அதில், சென்னை அயனாவரத்தைச் சேர்ந்த விஜயகாந்த் (46) என்பதும், செங்கல்பட்டு பகுதியில் தொடர் பைக் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.
மேலும் வேளச்சேரி, பெருங்குடி, தாம்பரம், கூடுவாஞ்சேரி, மறைமலைநகர் காவல் நிலையங்களில் பைக் திருட்டு வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் வழக்கு பதிந்து விஜயகாந்தை கைது செய்தனர். மேலும், செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
