
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை ஒன்றியம் பெரிய மூலிப்பட்டியில் நேற்று வாக்குச்சாவடிக்குள் புகுந்து வாக்குப்பெட்டியைத் தூக்கிச் சென்ற இளைஞர் கைது செய்யப்பட்டார்.
பெரிய மூலிப்பட்டியில் நேற்று மாலை வாக்குப்பதிவு நிறைவுற்ற பிறகு அடையாள அட்டை இல்லாமல் வாக்களிக்க சென்ற இளைஞர் ஒருவர் தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த அலுவலர்களுடன் வாக்குவாதம் செய்துவிட்டு வெளியே சென்றார்.
அவர் சென்ற சிறிது நேரத்தில் பூட்டப்பட்டிருந்த வாக்குச்சாவடியின் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே புகுந்த ஒருவர், வாக்குப்பதிவுக்கு பயன்படுத்தப்பட்ட வாக்குப்பெட்டியைத் தூக்கிக்கொண்டு ஓடினார். தகவலறிந்து அங்கு வந்த மாத்தூர் போலீஸார் சுற்றுவட்டார பகுதிகளில் தேடினர் அப்போது, அங்குள்ள ஒரு தோட்டத்தில் கிடந்த வாக்குப் பெட்டியை மீட்டு எடுத்து வந்துவாக்குச் சாவடியில் ஒப்படைத்தனர்.
மேலும், வாக்குப்பெட்டியைத் திருடிச் சென்றதாக பெரிய மூலிப்பட்டியைச் சேர்ந்த து.மூர்த்தி என்பவரை கைது செய்தனர். மதுபோதையில் இவ்வாறு செய்ததாக போலீஸாரிடம் அவர் தெரிவித்துள்ளார்.