
திருச்சியில் உடற்கட்டமைப்பு போட்டியில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக ஜிம் பயிற்சியாளரை அரிவாளால் வெட்டி கொலை முயற்சி செய்த ரவுடி குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது
திருச்சி மாநகர காவல் ஆணையர் திருமதி.ந.காமினி, இ.கா.ப., அவர்கள் திருச்சி மாநகரில் சட்டம் ஒழுங்கை பேணிக்காக்கும் வகையில் அபாயகரமான ஆயுதங்களை கொண்டு கொலை மற்றும் கொலை முயற்சியில் ஈடுபடும் குற்றவாளிகள் மீது திருச்சி மாநகர காவல் துணை ஆணையர்கள் மற்றும் சரக உதவி ஆணையர்கள் சட்டரீதியான உரிய நடவடிக்கை எடுக்க அறிவுரை வழங்கியுள்ளார்கள்.
கடந்த 29.04.2024-ந்தேதி காந்திமார்க்கெட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அலங்கநாதபுரம் மெயின்ரோட்டில் உடற்கட்டமைப்பு போட்டியில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக ஜிம் பயிற்சியாளரை வழிமறித்து, தகராறு செய்து அரிவாளால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்டதாக பெறப்பட்ட புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணையில் மேற்படி சம்பவத்தில் ஈடுபட்ட தாரநல்லூர் வீரம்மா நகரை சேர்ந்த ரவுடி கீர்த்திவாசன் வயது 24, த.பெ.அர்ஜீணன் மற்றும் 4 நபர்கள் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், ரவுடி கீர்த்திவாசன் மீது காந்திமார்க்கெட் காவல்நிலையத்தில் ஒரு அடிதடி வழக்கு, வழிப்பறி செய்ததாக ஒரு வழக்கு, கொள்ளையடிக்க திட்டமிட்டதாக ஒரு வழக்கு உட்பட 4 வழக்குகள் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டு விசாரணையில் இருப்பது தெரிய வந்தது.
எனவே, ரவுடி கீர்த்திவாசன் என்பவர் தொடர்ந்து குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுபவர் என விசாரணையில் தெரிய வந்ததால், மேற்கண்ட எதிரியின் தொடர் குற்ற நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு காந்திமார்க்கெட் காவல் ஆய்வாளர் கொடுத்த அறிக்கையினை பரிசீலனை செய்து, திருச்சி மாநகர காவல் ஆணையர் திருமதி.ந.காமினி, இ.கா.ப., அவர்கள் மேற்படி எதிரியை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின்கீழ் கைது செய்ய ஆணையிட்டார்கள். அதனை தொடர்ந்து திருச்சி மத்திய சிறையில் உள்ள எதிரி மீது பிறப்பிக்கப்பட்ட குண்டர் தடுப்பு சட்ட ஆணையினை சார்பு செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.
மேலும், திருச்சி மாநகரில் அபாயகரமான ஆயுதங்களை வைத்து குற்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்களால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
