
வெள்ளத்துரை: திடீர் சஸ்பெண்ட்… திடீர் நடவடிக்கை `ரத்து’.
திருவண்ணாமலை மாவட்ட குற்ற ஆவண காப்பகத்தில் ஏ.டி.எஸ்.பி-யாக பணியாற்றி வந்தார் வெள்ளத்துரை. இவர் அதிரடி நடவடிக்கைக்கு பெயர் போனவர். அதோடு காவல்துறையில் என்கவுன்ட்டர் ஸ்பெஷலிஸ்ட் என்ற பெயரெடுத்தவர். இந்தச் சூழலில்தான் ஏ.டி.எஸ்.பி வெள்ளத்துரை கடந்த 31-ம் தேதி பணியிலிருந்து ஒய்வு பெற இருந்தார். ஆனால் கடந்த 30-ம் தேதி அவரை சஸ்பெண்ட் செய்து உள்துறை செயலாளர் அமுதா உத்தரவிட்டார். இதுகாவல்துறையில் பேசு பொருளானது. வெள்ளத்துரை தரப்பும் இந்த சஸ்பெண்டை எதிர்த்து உயர் நீதிமன்றத்தை நாட ஆலோசனை நடத்தியது.
இந்த நிலையில் ஒவ்வொரு மாத இறுதியில் சட்டம் ஒழுங்கு குறித்து தலைமைச் செயலகத்தில் உள்துறை அலுவலர்களுடன் காவல்துறை அதிகாரிகளும் கலந்து ஆலோசிப்பது வழக்கம். அதன்படி நேற்று முன்தினம் (31.5.2024) நடந்த கூட்டத்தில் வெள்ளத்துரை சஸ்பெண்ட் விவகாரம் குறித்து ஆலோசிக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. அப்போது காவல்துறை தரப்பிலிருந்து வெள்ளத்துரை நீதிமன்றத்துக்குச் சென்றால் என்ன பதில் சொல்வது என விவாதிக்கப்பட்டிருக்கிறது. அதோடு சஸ்பெண்ட் செய்ய காரணமாக சொல்லப்பட்ட சி.பி.சி.ஐ.டி வழக்கின் ரிப்போர்ட் வெள்ளத்துரைக்கு சாதகமாக இருப்பதால் என்ன செய்வது என காவல்துறை தரப்பிலிருந்து கேள்விகள் எழுப்பப்பட்டதாகத் தெரிகிறது.
இதற்கிடையில் வெள்ளத்துரை சஸ்பெணட் செய்யப்பட்ட செய்தி முதல்வரின் கவனத்துக்கும் கொண்டு செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து முடிவு எடுக்க கூடிய ஐ.ஏ.எஸ் அதிகாரிகள், ஐ.பி.எஸ் அதிகாரிகள் வெள்ளத்துரை சஸ்பெண்ட் முடிவு குறித்து மீண்டும் ஆலோசனை நடத்தியிருக்கிறார்கள். அதில் சில நிபந்தனைகளோடு வெள்ளத்துரையை ஒய்வு பெற அனுமதிக்கலாம் என முடிவு எடுக்கப்பட்டு உடனடியாக அதற்காக ஆர்டரும் உள்துறையிலிருந்து வெளியானது. அதன்பிறகே வெள்ளத்துரை சஸ்பெண்ட் விவகாரத்துக்கு முற்றுப்புள்ளி ஏற்பட்டது.
