
கடலூர் அருகே ரைஸ் மில்லில் இருந்து 1600 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
ரேஷன் கடைகளின் மூலம் வழங்கப்படும் இலவச அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக கடலூர் மாவட்ட உணவு பொருட்கள் தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் வந்தது.
இதனையடுத்து கடத்தல் தடுப்பு பிரிவு அலுவலர் உதயகுமார், தனி தாசில்தார் பூபாலச்சந்திரன், பறக்கும் படை அரவிந்தன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கண்ணன், ஏழுமலை மற்றும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது நெல்லிக்குப்பம் ரோடு குறவன்பாளையம் அருகில் உள்ள தனியார் ரைஸ் மில்லில் அதிரடியாக சோதனையிட்டனர். இதில் 1600 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்ததை கண்டறிந்தனர். இதையடுத்து ரைஸ் மில்லின் உரிமையாளர் தாட்சாயணியிடம் விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுத்தனர். மேலும், பதுக்கி வைத்திருந்த 1600 கிலோ ரேஷன் அரிசியினை பறிமுதல் செய்தனர்.
