புதிய குற்றவியல் சட்டத்தின் கீழ் சாலையோர வியாபாரி மீது முதல் வழக்கு!
புதிய குற்றவியல் சட்டங்கள் இன்று அமல்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, பாரதிய நியாய சம்ஹிதா சட்டம் 2023-ன் கீழ் தில்லி கம்லா மார்க்கெட் காவல் நிலையத்தில் சாலையோர வியாபாரியின் மீது முதல் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தில்லி ரயில் நிலையத்தின் நடை மேம்பாலத்தின் கீழ் இடையூறு விளைவிக்கும் வகையில் கடை வைத்திருந்ததாக குற்றவியல் சட்டமான பாரதிய நியாய சன்ஹிதா பிரிவு 285ன் கீழ் அவர் மீது வழக்குப் பதி்யப்பட்டுள்ளது.
முதல் தகவல் அறிக்கையின் படி குற்றவாளியின் பெயர் பங்கஜ் குமார் என்றும், பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது
மத்திய அரசு புதிதாக இயற்றியுள்ள 3 குற்றவியல் சட்டங்கள் இன்று (ஜூலை 1) முதல் அமல்படுத்தப்பட்டுள்ளன.
நாட்டில் ஆங்கிலேயா் ஆட்சிக் காலத்தில் அமல்படுத்தப்பட்ட இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம், இந்திய ஆதாரச் சட்டம் ஆகியவற்றுக்கு மாற்றாக பாரதிய நியாய சம்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக்ஷா, பாரதிய சாக்ஷிய அதினியம் ஆகிய குற்றவியல் சட்டங்களை மத்திய அரசு இயற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.