Police Department News

இருமல் தொல்லைக்காக நரம்பு ஊசி போட்டார்!’ -பெரம்பலூர் போலி

இருமல் தொல்லைக்காக நரம்பு ஊசி போட்டார்!' -பெரம்பலூர் போலி மருத்துவரால் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்போலி மருத்துவர்களால் ஏற்படும் விபரீதங்கள் அவ்வப்போது திகிலடைய வைக்கிறது. அந்தவகையில், மருந்துக் கடைக்காரர் போட்ட நரம்பு ஊசி, பெண் ஒருவரின் உயிரைப் பறித்த அதிர்ச்சி சம்பவம் பெரம்பலூரில் நடந்துள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பின்தங்கிய கிராமங்களான கீழப்புலியூர், முருகன்குடி, எழுமூர், பெருமத்தூர், வி.களத்தூர், வடக்கலூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் மருத்துவம் படிக்காத சிலர் அப்பகுதிகளில் வலம்வருவதுடன், ஆங்கில மருத்துவமான அலோபதி முறையில் மக்களுக்கு சிகிச்சையளித்து வருகின்றனர்.இதுகுறித்து அவ்வப்போது புகார்கள் எழுந்தாலும், சம்பந்தப்பட்ட மருத்துவ அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்கிற குற்றச்சாட்டும் இருந்து வருகிறது. இந்த நிலையில்தான் இப்படி ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது.பெரம்பலூர் மாவட்டம், மங்களமேடு அருகேயுள்ளது கீழப்புலியூர் கிராமம். இந்தக் கிராமத்தைச் சேர்ந்த கதிரவன், அதே ஊரில் கண்ணன் மெடிக்கல் எனும் பெயரில் மருந்துக்கடை நடத்தி வருகிறார்.டிப்ளமோ மருந்தியல் எனப்படும் டி.பார்ம் மட்டுமே படித்துள்ள இவர், அப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு ஆங்கில மருத்துவ முறைப்படி ஊசி போடுவது, மருந்து மாத்திரைகள் கொடுப்பது எனச் செயல்பட்டு வந்தார். அப்பகுதி மக்களும் அவரிடம் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்துள்ளனர்.இந்த நிலையில், கீழப்புலியுரை அடுத்த சிறுகுடல் கிராமத்தைச் சேர்ந்த பெரியசாமி என்பவரின் மனைவி தமிழ்ச்செல்வி, இருமல் பிரச்னைக்குச் சிகிச்சை பெறுவதற்காக கதிரவனிடம் சென்றுள்ளார். அவரைப் பரிசோதித்த கதிரவன், தமிழ்ச்செல்விக்கு நரம்பு ஊசி போட்டு, மருத்து மாத்திரையைக் கொடுத்துள்ளார். ஊசி போட்ட சிறிது நேரத்தில், அந்த இடத்திலேயே மயங்கி விழுந்த தமிழ்ச்செல்வி பரிதாபமாக உயிரிழந்தார்.அதையடுத்து, இறந்த தமிழ்ச்செல்வியை வீட்டுக்குள் தூக்கிச் சென்ற கதிரவன் நீண்டநேரமாக வீட்டை உள்தாழிட்டுக்கொண்டு வெளியே வரவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் சந்தேகமடைந்த அப்பகுதி மக்கள் அளித்த தகவலின்பேரில் திரண்டு வந்த தமிழ்ச்செல்வியின் உறவினர்கள், கதிரவனின் வீட்டை முற்றுகையிட்டனர். இதையடுத்து, வேறு வழியின்றி கதவைத் திறந்து வெளியே வந்தாராம்.தகவலறிந்து சம்பவ இடத்துக்குவந்த மங்கலமேடு போலீஸார், இறந்துபோன தமிழ்ச்செல்வியின் சடலத்தைக் கைப்பற்றி பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்குப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், கதிரவன், சிகிச்சைக்காகப் பயன்படுத்திய மருந்துகள், ஊசி, மாத்திரைகள் மற்றும் உபகரணங்களைப் பறிமுதல் செய்த போலீஸார், போலி மருத்துவர் கதிரவனைக் கைது செய்தனர்.உயிரிழந்த தமிழ்ச் செல்வியின் கணவர் பெரியசாமி சிறுநீரகப் பிரச்னையால் அவதிப்பட்டார். இதனால் அவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு உயிரிழந்துவிட்டார். இந்த நிலையில் சளி, இருமல் சிகிச்சைக்காகப் போலி மருத்துவரிடம் சிகிச்சைக்குச் சென்ற தமிழ்ச் செல்வியும் உயிரிழந்துவிட்டதால், அவர்களின் நான்கு குழந்தைகளும் ஆதரவின்றித் தவித்து வருகின்றனர்.தமிழ்ச்செல்வி இறந்த தகவலறிந்து வந்த உறவினர்களிடம்,பிரச்னையைப் பெரிதுபடுத்தவேண்டாம், இறந்துபோன தமிழ்ச்செல்வியின் குழந்தைகளுக்கு 4 லட்சமும் இறுதிச் சடங்குக்கு 50,000 தருகிறேன்’ எனக் கதிரவன் பேரம் பேசியதாகவும் கூறப்படுகிறது. இதனாலேயே, தமிழ்ச்செல்வியின் மரணம் குறித்து போலீஸாருக்குத் தகவல் தெரியப்படுத்த 2 மணி நேரம் வரையில் தாமதமானது என்றும் கூறப்படுகிறது.தமிழ்ச்செல்வி உயிரிழப்புக்குக் காரணமான போலி மருத்துவர் கதிரவன் மீது உரிய நடவடிக்கை எடுப்பதுடன், பெரம்பலூர் மாவட்டம் முழுவதும் சிகிச்சையளித்து வரும் போலி மருத்துவர்களை அடையாளம் கண்டு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

போலீஸ் இ நியூஸ் செய்தியாளர் திரு சந்தோஷ் அம்பத்தூர்

Leave a Reply

Your email address will not be published.