Police Department News

விருதுநகர் மாவட்டத்தில் ஒரு சிறந்த காவல் நிலையம்

விருதுநகர் மாவட்டத்தில் ஒரு சிறந்த காவல் நிலையம்

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி B5 -காவல் நிலையம், மதுரை – தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் ஊருக்கு மத்தியில் அமைந்துள்ளது. இந்த காவல் நிலையம் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் (1856) – ம் ஆண்டு கட்டப்பட்ட காவல் நிலையம், பழமை மாறாமல் இன்னும் பயன்பாட்டில் உள்ளது. மேலும் புதியதாக 2011 ஆம் ஆண்டு காவல் நிலையம் கட்டப்பட்டு அதுவும் செயல்பாட்டில் இருந்து வருகிறது.

இந்த காவல் நிலையத்தை சுற்றி 10 கிராம ஊராட்சியும் 150-க்கும் மேற்பட்ட கிராமங்களும், 1 பேரூராட்சியும் – 15 வார்டுகளும் கொண்டுள்ளது. இந்த பகுதிகளில் நடைபெறும் குற்ற சம்பவங்கள், திருவிழா நடத்துவதற்கான அனுமதி, விளையாட்டுப்போட்டி நடத்த அனுமதி, இதர காவல்துறையில் அனுமதிகள் பெற இந்த காரியாபட்டி B5 – காவல் நிலையத்திற்கு தான் பொதுமக்கள் வந்து செல்ல வேண்டும். ஆகையால் இந்தக் காவல் நிலையத்தில் அப்போது சார்பு ஆய்வாளராக பணிபுரிந்து வந்த திரு. அசோக்குமார் அவர்கள் காவல் நிலையத்தை காவல் நிலையமாக இல்லாமல் அதனை முற்றிலும் மாற்றி பொதுமக்கள் யாரும் அச்சம் இல்லாமல் காவல் நிலையத்திற்கு வந்து செல்லும் விதமாக மாற்றம் செய்தார்.

குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் காவல் நிலையத்தில் சுற்றுப்புற சுவர்கள் கட்டப்பட்டு அதில் தமிழர்களின் பறைசாற்றும் ஜல்லிக்கட்டு ஓவியங்கள், தேசிய தலைவர்கள் படங்கள் ஓவியமாக வரைபட்டு விழிப்புணர்வு வாசகங்கள் எழுதப்பட்டுள்ளது. மேலும் காவல் நிலையம் உட்புறம் உள்ள சுற்றுப்புற சுவர்களில் திருக்குறள் மற்றும் அதற்கான விளக்க உரைகளும் எழுதப்பட்டிருக்கிறது. காவல் நிலைய வளாகத்தில் மூலிகை தோட்டங்கள் வைத்து பராமரிக்கப்பட்டு வருகிறது. மேலும் அனைவருக்கும் புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை கற்றுக்கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் காவல் நிலையம் நுழைவு வாயிலில் திருவள்ளுவர் நூலகம் அமைக்கப்பட்டு அதில் போட்டித் தேர்வுக்கான புத்தகங்கள், சட்டம் சார்ந்த புத்தகங்கள், வரலாற்று புத்தகங்கள், தேசியத் தலைவர்கள் புத்தகங்கள், கவிதைகள், நாவல்கள் என பல்வேறு வகையான புத்தகங்கள் இந்த காவல் நிலையத்தில் உள்ள நூலகத்தில் இடம்பெற்றுள்ளது.

சிறுவர் சிறுமியர்களுக்காக பாய்ஸ் கிளப் செயல்படுத்தப்பட்டு பயன்பாட்டில் இருந்து வருகிறது.

காவல் நிலையம் உட்புறம் சென்றால் சுவர்கள் முழுவதும் ஆங்காங்கே விழிப்புணர்வு, தன்னம்பிக்கை வாசகங்கள், ஓவியங்கள், வரையப்பட்டுள்ளது.

மேலும் காவல் நிலையத்தில் மனுதாரர்களுக்காக காத்திருப்பு அறை ஏற்பாடு செய்து அதில் சட்டம் தெளிவு பெற விழிப்புணர்வு வாசகங்கள் மற்றும் பொன் மொழிகள் இடம்பெற்று அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. அதில் குழந்தைகளுக்காக டோரா புஜ்ஜி, சோட்டா பீம் போன்ற படங்களும் இடம் பெற்றுள்ளன.

இந்த நிலையில் காரியாபட்டி காவல் நிலையத்தின் செயல்பாடுகளான சட்டங்களை அமல்படுத்துதல், குற்றங்களை தடுத்தல், குற்றங்களை கண்டறிதல், மற்றும் விசாரணை செய்தல், சட்டம் ஒழுங்கை பராமரித்தல், அமைதியை நிலை நாட்டுதல், அவசர நிலைகளுக்கு பதிலளித்தல் மற்றும் பல சேவைகளை வழங்கி வருவதை பாராட்டி இந்திய தர கவுன்சில் நிறுவனம் ஐ.எஸ்.ஓ. (ISO – 9001:2015) தர சான்றிதழ் வழங்கி கௌரவப்படுத்தியது.

இவ்வளவு பெருமைக்கு எல்லாம் சொந்தக்காரர் காரியாபட்டி காவல் நிலையத்தில் சட்டம், ஒழுங்கு சார்பு ஆய்வாளராக பணியாற்றியவர் திரு.P. அசோக்குமார் அவர்கள் தான்.

இவரது பணியை பாராட்டும் விதமாக கடந்த வருடம் ஆகஸ்ட் – 15 – 2024 அன்று விருதுநகர் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற 78-வது சுதந்திர தின விழாவில் விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர்.ஜெயசீலன் ஐ.ஏ.எஸ் அவர்கள் காரியாபட்டி காவல் நிலைய சட்ட, ஒழுங்கு சார்பு ஆய்வாளராக இருந்த திரு.P.அசோக்குமார் அவர்களுக்கு விருது வழங்கி பாராட்டி கௌரவப்படுத்தினார்.

அதனைத் தொடர்ந்து காரியாபட்டி காவல் நிலையத்திற்கு திடீர் ஆய்வு பணிக்கு வருகை தந்த தமிழ்நாடு சட்ட ஒழுங்கு ஏடிஜிபி டேவிட்சன் தேவசீர்வாதம் காவல் நிலைய பராமரிப்புகள் மற்றும் ஐஎஸ்ஓ தரச் சான்றிதழ் பெற்றதற்காக சார்பு ஆய்வாளர் அசோக்குமார் மற்றும் காவலர்களை வெகுவாக பாராட்டினார்.

மேலும் இவர் பணிபுரியும் காவல் நிலையங்களில் எல்லாம் பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்துள்ளார். குறிப்பாக மல்லாங்கிணறு காவல் நிலையத்தில் சுவர் முழுவதும் திருக்குறள்கள், அப்துல்கலாம் பொன்மொழிகள், நூலகம், அமைத்து அங்கேயும் இவரது புகழ் ஓங்கி ஒலித்தது.

மேலும் மறைமுகமாக பல்வேறு தரப்பினருக்கு படிப்பு செலவுகளை ஏற்று படிக்க வைத்தல், ஆதரவற்றோர் ஏழை எளியவர்களுக்கு உதவி செய்தல், தாய், தந்தை இல்லாத குழந்தைகளுக்கு நோட்டு, புத்தகங்கள் வாங்க உதவி செய்தல் இதுபோன்று பல்வேறு சமூகப் பணிகளையும் செய்து வருகிறார் காரியாபட்டி காவல் நிலைய சார்பு ஆய்வாளராக இருந்த திரு.P.அசோக்குமார் அவர்கள்.

இந்த நிலையில் காரியாபட்டி காவல் நிலையம் ஐ.எஸ்.ஓ தரச் சான்றிதழ் பெற்றதையொட்டி, அதற்காக சிறப்பாக பணியாற்றிய அப்போது காரியாபட்டி காவல் நிலையத்தில் சார்பு ஆய்வாளராக பணியாற்றிய P.அசோக்குமார் அவர்களுக்கு தமிழ்நாடு காவல்துறை இயக்குநர் (DGP) திரு.சங்கர் ஜிவால் அவர்கள் பாராட்டு சான்றிதழ் வழங்கி கௌரவப்படுத்தினார்.

Leave a Reply

Your email address will not be published.