`80,000 ஹெல்மெட் கேஸ், 40,000 சீட்பெல்ட் கேஸ்!’- ரூ.2 கோடிக்கு மேல் வசூலித்த நீலகிரி காவல்துறை2019-ம் ஆண்டு 1 லட்சத்து 71,968 வழக்குகள் பதிவுசெய்து ரூ.2 கோடியே 21 லட்சத்து 82,000 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் குறைந்த அளவு குற்றச் சம்பவங்கள் நடைபெறும் நீலகிரியில் சட்ட ஒழுங்கு பிரச்னை மற்றும் கொடும் குற்றங்கள் நடந்திராத ஆண்டாக 2019 நிறைவடைந்தது. ஆனால், நீலகிரியில் கடந்த ஆண்டு 1 லட்சத்து 71,968 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூ.2 கோடியே 21 லட்சத்து 82,120 அபராதமாக வசூலித்துள்ளது நீலகிரி காவல்துறை.நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசிமோகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், நீலகிரி மாவட்டத்தில் கடந்த 2019-ம் ஆண்டு பெரிய அளவில் சட்டம் ஒழுங்கு பிரச்னை மற்றும் கொடும் குற்றங்கள் ஏதும் நிகழவில்லை. கடந்த 2018-ம் ஆண்டை காட்டிலும் 2019-ம் ஆண்டு குற்ற வழக்குகள் மிகக் குறைவாகவே பதிவாகியுள்ளது. இந்த ஆண்டில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி ஊர்வலம், ஊட்டி, குன்னூர், பொக்காபுரம், ஆனைக்கட்டி போன்ற பகுதிகளில் விமரிசையாக நடக்கும் மாரியம்மன் கோயில் திருவிழாக்கள், இதர விழாக்களும் மிக அமைதியான முறையில் நடைபெற்று முடிந்தது.கடந்த 2018-ம் ஆண்டைக் காட்டிலும் 2019-ம் ஆண்டில் சாலை விபத்துகள் மிகவும் குறைந்துள்ளது. இதன் மூலம் இறப்பு விகிதமும் குறைந்துள்ளது. சாலை விபத்துகள் ஏற்படாமல் இருக்க சாலை பாதுகாப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வாகன ஓட்டுநர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வந்தது. கடந்த 2018-ம் ஆண்டு 28 சாலை விபத்துகள் பதிவு செய்யப்பட்டன. இதில், 28 பேர் பலியாகினர்.இந்த ஆண்டு இதுவரை 11 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில், 13 பேர் உயிரிழந்துள்ளனர். அதேபோல், கடந்த ஆண்டு 228 சாலை விபத்து. இதில், 200 பேர் காயம் அடைந்துள்ளனர். இந்த ஆண்டு 157 வழக்குகள் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில், 308 பேர் காயம் அடைந்துள்ளனர். இந்த ஆண்டு தலைக்கவசம் (ஹெல்மெட்) அணியாமல் வாகனத்தை இயக்கியவர்கள் மீது 84,687 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.குடிபோதையில் வாகனங்களை இயக்கியதாக 1,794 பேர் மீதும், செல்போன்களைப் பேசியபடி வாகனங்களை இயக்கியதாக 2,764 பேர் மீதும், சீட் பெல்ட் அணியாமல் சென்றதாக 40,381 பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது.இது தவிர 77,717 இதர வழக்குகள் என மொத்தம் ஒரு லட்சத்து 71.968 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் ரூ.2 கோடியே 21 லட்சத்து 82,120 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது” என அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
போலீஸ் இ நியூஸ் செய்தியாளர் திரு சந்தோஷ் அம்பத்தூர்