Police Department News

தமிழ்நாட்டில் புதிய டிஜிபி யார்

தமிழ்நாட்டில் புதிய டிஜிபி யார்

தமிழ்நாட்டின் அடுத்த போலீஸ் டிஜிபி யார் என்ற செய்திக் கட்டுரைகளும் விவாதங்களும் சில நாள்களாகவே அதிகளவில் பார்க்கமுடிகிறது.

இரண்டரை ஆண்டுகளை சர்வீசில் மிச்சம் வைத்திருக்கும் சந்தீப்ராய் ரத்தோர், மூன்றரை ஆண்டுகளை இன்னும் சர்வீசில் வைத்திருக்கும் ராஜீவ்குமார் ஆகிய இருவரில் ஒருவருக்குதான் டிஜிபி பதவிக்கான எல்லா நெறிமுறை – விதிமுறைகளும், சட்ட அம்சங்களும் பொருந்திப் போகிறது.

மூன்று மாதங்களுக்கு முன்னரே
அதாவது மே -2025- தொடக்கத்திலேயே UPSC என்கிற மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்துக்கு, புதிய டிஜிபிக்கள் பட்டியலை தமிழ்நாடு அரசு அனுப்பி வைத்திருக்க வேண்டும். தமிழ்நாடுதான் என்றில்லை, எந்த மாநிலத்தின் போலீஸ் டிஜிபி (காவல் தலைமை இயக்குநர்) புதிதாக நியமனம் செய்யப்படுவதாக இருந்தாலும் மூன்றுமாதங்களுக்கு முன்னரே அதற்கான பட்டியல் UPSC பார்வைக்குப் போய்விடவேண்டும்.

தமிழ்நாட்டளவில் பார்த்தால், தற்போது டிஜிபியாக பொறுப்பில் இருக்கும் திரு. சங்கர்ஜிவால், ஆகஸ்ட் 2025-ல் பணி ஓய்வு பெறவேண்டும். (ஓய்வு பெறுகிறார் என்ற முன்முடிவுக்கு வரமுடியாது; அது மாநில அரசின் முடிவு) சரியாய்ச் சொல்வதென்றால், இன்றிலிருந்து 24-ஆம் நாள், ஆகஸ்ட் 14-ஆம் தேதியோடு சங்கர்ஜிவால் சர்வீஸ் முடிகிறது. விதிகளின்படி, மே -2025- வாக்கில் புதிய டிஜிபி தேர்வுக்கான பட்டியலை UPSC பார்வைக்கு தமிழ்நாடு அரசு அனுப்பி வைத்திருக்க வேண்டும். அப்படி நடந்திருக்க வாய்ப்பில்லை என்றே தெரிகிறது. அப்படி நடந்திருந்தால் இந்நேரத்துக்கு கோட்டை வட்டாரமும், போலீஸ் வட்டாரமும், புது டிஜிபியின் பெயரை எப்போதோ உலகிற்கு சொல்லி முடித்திருக்கும்.

டிஜிபி அந்தஸ்தில் எப்போதுமே, மாநில அளவில் எட்டு அல்லது பத்து நபர்கள் வரை இருப்பார்கள். எத்தனை டிஜிபிகள் இருந்தாலும், சட்டம் ஒழுங்கு டிஜிபியாக பொறுப்பேற்கிறவர் மட்டும்தான், காவல் துறையின் தலைமை இயக்குநர் என்கிற தலைமை (டிஜிபி) அலுவலர் ஆகமுடியும்.

பிரகாஷ்சிங் என்பவர் தொடர்ந்த வழக்கின் அடிப்படையில், உச்சநீதி மன்றம் அளித்த தீர்ப்பின்படியே; எல்லா மாநில போலீஸ் டிஜிபி பணியிடங்களும் தீர்மானிக்கப்படுகிறது. அதன்படி மாநில சட்டம் ஒழுங்கு போலீஸ் டிஜிபியாக பதவி ஏற்கப்போகிறவர், பதவியேற்கும் நாளில் இருந்து, பணி ஓய்வுக்காலம் (சர்வீஸ்) என்பது குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் இருக்க வேண்டும். அந்த விதிகளின்படி தேர்வு பெற்று டிஜிபியாக வந்தவர்தான் சங்கர்ஜிவால். இப்போதும் அதே விதிமுறைதான், மாற்றத்துக்கு வாய்ப்பே இல்லை. சங்கர்ஜிவால், 1990ஆம் ஆண்டு இந்திய காவல்பணி (இகாப) வரிசையை (IPS BATCH) சேர்ந்தவர், உத்தரகாண்ட் மாநிலத்துக்காரர்.

அடுத்த நிலை சீனியாரிட்டியில் 1992-ஆம் ஆண்டு இகாப (BATCH) வரிசையைச் சேர்ந்தவர்கள், புதுதில்லிக்காரரான சந்தீப்ராய் ரத்தோர் (முன்னாள் சென்னை போலீஸ் கமிஷனர்), நெல்லையைச் சேர்ந்த வன்னியப் பெருமாள், பீஹாரைச் சேர்ந்த அபய்குமார்சிங் (முன்னாள் சென்னை இணை கமிஷனர்) மற்றும் ராஜீவ்குமார் உள்ளனர். இந்த நால்வரை விட சீனியர் இகாப வரிசை (1990) யில் அதாவது சங்கர்ஜிவால் வரிசையிலேயே இருக்கிறவர், ராஜஸ்தானை சேர்ந்த
சீமா அகர்வால்.
இந்த ஐவர் மட்டுமே இப்போது போட்டியில் இருப்பவர்கள் என்ற கணக்கில் பார்த்தால், டிஜிபியாக பதவி ஏற்கும் காலத்திலிருந்து பணி ஓய்வு காலத்துக்கு குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகள் இவர்களுக்கு சர்வீஸ் (பணிக்)காலம் இருக்க வேண்டும்.
முதலில் சீமா அகர்வால் பற்றி பார்ப்போம். ஜூன் 2026-ல் பணி ஓய்வை எதிர்நோக்கியுள்ள இவருக்கு மிச்சமுள்ள சர்வீஸ் காலம் 10 மாதங்கள் மட்டுமே. அடுத்ததாக அபய்குமார்சிங். 2026ஆம் ஆண்டின் தொடக்கத்திலேயே இவரது சர்வீஸ் முடிகிறது. அதாவது இன்னும் 6மாத காலமே இவர் காவல் பணியில் இருப்பார்.
அதேபோல் வன்னியப் பெருமாளுக்கு ஓராண்டு ஏழுமாதகால சர்வீசும், சந்தீப்ராய் ரத்தோருக்கு இரண்டாண்டு ஆறுமாத காலங்களும்; ராஜீவ்குமாருக்கு மூன்று ஆண்டுகள் ஐந்துமாதம் சர்வீசும் இருக்கிறது.

இந்த ஐவர் தவிர, பஞ்சாப்பை சேர்ந்த மகேஷ்குமார் அகர்வால் (முன்னாள் சென்னை போலீஸ் கமிஷனர்- 1972-ல் பிறந்தவர்.) இவருக்கு சர்வீஸ் இன்னும் ஏழு வருடம் இருக்கிறது. தமிழ்நாட்டின் நாகை மாவட்டத்தைச் சேர்ந்த வெங்கட்ராமன், (1968 மத்தியில் பிறந்தவர்) இவருக்கு இரண்டரை ஆண்டுகள் இன்னும் சர்வீஸ் இருக்கிறது. மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த வினீத் தேவ் வாங்க்டே, (1970-ஆம் ஆண்டு பிறந்தவர்) இவருக்கு இன்னும் 5 ஆண்டுகள் சர்வீஸ் இருக்கிறது. ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த சஞ்சய்மாத்தூர், (1968- ஆம் ஆண்டு பிறந்தவர்) இவருக்கு இன்னும் இரண்டே கால் ஆண்டுகள் சர்வீஸ் இருக்கிறது. இவர்கள் நால்வரும் டிஜிபி தகுதிப் பட்டியலில் இருக்கிறார்கள்.

அதே வேளையில் இவர்கள் நால்வரும் அடுத்த நிலையான 1994- ஆம் ஆண்டு, இகாப (BATCH) வரிசையைச் சேர்ந்தவர்கள். சீனியாரிட்டியில் (தகுதி மூப்பில்) சந்தீப்ராய் ரத்தோர், ராஜீவ் குமார், அபய்குமார்சிங், சீமா அகர்வால் (ம) வன்னியப்பெருமாள் ஆகியோருக்கு (1992- BATCH) பின்னால் உள்ளவர்கள்.

1992- ஆம் ஆண்டு இகாப (IPS -BATCH) வரிசை முன்னால் இருக்கும் போது பின் வரிசையான, 1994- ஆம் ஆண்டு இகாப (IPS BATCH) வரிசையை எப்படி தேர்வு செய்ய முடியும்? என்ற கேள்வி எழலாம். கேள்வி எழுந்தால், “கொள்கை முடிவு” என்கிற ரெடிமேட் பதிலை மாநில அரசுகள், எப்போதுமே தயாரிப்பில் வைத்திருக்கும்.
சீனியர் ‘விருமாண்டி’ ஆர். நட்ராஜ் இருக்கும்போது, ஜூனியர் லத்திகாசரணை போலீஸ் டிஜிபி 1 ஆக்கிய மாநிலத்தில்தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை அவ்வப்போது எழுதும் கட்டுரைகளின் மூலம் அறிந்து தெளிக!

UPSC தேர்வு முறை இப்படித்தான் இருக்கும் :

மாநிலத்திலிருந்து UPSC. பார்வைக்கு பட்டியல் போன பின்னர், UPSC தலைவர், மத்திய உள்துறைச் செயலாளர், மாநில தலைமைச் செயலாளர், தற்போது டிஜிபி பொறுப்பு வகிக்கும் அலுவலர், மத்திய காவல்படை இயக்குநர் – தலைவர், மத்திய துணை ராணுவப்படை இயக்குநர் – தலைவர் ஆகியோரைக் கொண்ட குழு, டிஜிபி பட்டியலில் இடம்பெற்றோரின் தகுதியை அலசி ஆராய்ந்து; அதில் மூவரை தெரிவு செய்து மாநில தலைமைச் செயலாளருக்கு அனுப்பி வைக்கும். அங்கேதான், “மூவரில் யார் மாநில டிஜிபி” என்ற முடிவு எடுக்கப்படும்.

தேர்வின்போது 30 ஆண்டுகள் காவல் பணியாற்றி டிஜிபி தகுதிநிலை பெற்றிருப்பதோடு, லெவல்-16 ஊதிய வரையறைக்கு மேலாக ஊதியம் பெறுபவராகவும் இருக்கவேண்டும் – அப்படி பெறுகிறாரா என்பதையும் கணக்கில் கொள்வார்கள்.

மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு பிரச்சினை, பாதுகாப்பு, அரசின் முக்கிய முடிவு உள்பட காவல்துறையின் அத்தனை பிரிவையும் கட்டுப்படுத்தவும், உத்தரவிடவும் மொத்த அதிகாரம் படைத்த பதவிதான் டிஜிபி 1 எனப்படும் தலைமை டிஜிபி பதவி.
காவல் துறையின் மைக் 1 (MIC 1) என்கிற கிரீட அடையாளமும், இந்தப்பதவி வகிக்கும் டிஜிபிக்குத்தான் இருக்கிறது. மாநிலத்தின் முதலமைச்சரோடு ஹாட் – லைனில் (HOTLINE) எப்போதும் எந்த நேரமும் பேசக் கூடிய சூழல், சட்டம் ஒழுங்கு போலீஸ் டிஜிபியான தலைமை டிஜிபிக்கு மட்டும்(காவல் தலைமை இயக்குநர்) தான் உண்டு.

இன்னொரு விஷயம் :
(இதற்கு வாய்ப்பில்லை)
பொறுப்பு டிஜிபி, இடைக்கால டிஜிபி என்று, இப்போதுள்ள போலீஸ் டிஜிபி சங்கர்ஜிவாலே பதவியில் தொடர்ந்து நீடிக்கிறார் என்றொரு சூழல் ஏற்பட்டால்; அது உச்சநீதிமன்ற நெறிமுறை – வழிகாட்டலை மீறுவதாகவே கருதப்படும். அதையும் கருதாது, விஷயத்தை சாதாரணமாகக் கடந்து போனால், தேர்தல் நெருங்கும் காலகட்டத்தில்
எதிர்க்கட்சிகள், தேர்தல் ஆணையத்திடம் போய் இதை முறையிட்டால்; யாரும் எதிர்பார்த்திராத புதிய டிஜிபியை தேர்தல் ஆணையமே உட்கார வைத்துவிடும்.

Leave a Reply

Your email address will not be published.