
காவல் விழியின் வலி:
காப்பவன் கடவுள் என்றால் காக்கியும் கடவுளே என்றொரு சொற்றொடர் உண்டு.. ஆனால் கடவுள் கூட அர்த்த சாம பூஜைக்கு அடுத்து பள்ளியறை சென்று தூங்க சென்று விடுகிறார். அதன் பிறகு அடுத்த நாள் அதிகாலை தான். ஆனால் இந்த காக்கிக்கு என்னவோ அதைவிட கூடுதல் பொறுப்பு உள்ளதோ என்று எண்ணம் தோன்றுகிறது. அதனால் தானோ இரவு பகல் பாராமல் தினம் தினம் ஞாயிறு திங்கள் பாராமல் பயணிக்கிறது இவர்களின் வாழ்க்கை. மற்ற அரசு ஊழியர்களைப் போல் இவர்களது பணிப்பயணம் சமவெளி பகுதியில் அமைந்த நெடுஞ்சாலையை போல் அல்ல. இவர்களின் பணிப்பயணம் ஒரு வித்தியாசமானது விசித்திரமானது ஆச்சரியமானது அதே சமயம் அதி பயங்கர ஆபத்தானதும் கூட.. ஒரு நீளமான மலைத்தொடரில் அமைந்திருக்கும் நெடுஞ்சாலை போன்று இவர்களது ஒவ்வொரு நாளும் பணி. சமதளத்தில் சென்று கொண்டிருக்கும் ரோடானது திடீரென்று ஒரு ஏற்றம் அதன் பிறகு ஒரு வளைவு அதன் பிறகு ஒரு குறுகல் அதன் பிறகு ஒரு திடீர் இறக்கம் மீண்டும் ஒரு ஏற்றம் அதன் பிறகு மிக குறுகிய கொண்டை ஊசி வளைவு திடீரென்று காட்டு மிருகங்களின் சாலை ஆக்கிரமிப்பு, இரவு நேரங்களில் ஒரு அமானுஷ்யம், இப்படி பல விந்தைகளை கொண்டிருக்கும் இவர்களின் பணிப்பயணம். இன்னும் ஓர் ஆச்சரியம் என்றால் இது அனைத்தும் ஒரு சில காவலர்களுக்கும் காவல் அதிகாரிகளுக்கும் ஒரே நாளில் சர்வசாதாரணமாய் அவர்களது பணியில் கடந்து போயிருக்கும்.. இதற்கு உதாரணமாய் சமீபத்தில் மலையாளத்தில் வெளிவந்த ரோந்து என்ற படம் ஆதாரம். மற்ற அரசு ஊழியர்கள் எல்லாம் ஆச்சரியமாய் பார்க்கும் பேசு பொருளை இவர்கள் அசாத்தியமாக சர்வ சாதாரணமாக கடந்து சென்று கொண்டிருப்பார்கள். உதாரணத்திற்கு ஐந்து வருடத்திற்கு ஒருமுறை வரும் தேர்தல் பணிகளில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் அந்த தேர்தல் நாள் மற்றும் அதற்கு முந்தைய நாள் வெளியூர் சென்று ஒரு புதிதான இடத்தில் இரவு தங்கி வேலை பார்ப்பது என்பது அவர்களுக்குஅந்தத் தேர்தல் பணி முடித்து அலுவலகம் வந்தவுடன் அடுத்த ஒரு வாரத்திற்கான பேசு பொருளாக இருக்கும். ஆனால் காவல்துறையில் இத்தகைய சூழ்நிலையானது அவர்களது பணியில் ஒவ்வொரு நாளும் பின்னி பிணைந்து இருக்கும்.. ஒரு பெண் காவலர் தனக்கு கொடுக்கப்பட்ட பிரேதத்தை பிரேத கூராய்வு முடித்து மீதமுள்ள திசுக்களை மேற்கொண்டு ஆய்விற்காக ஒரு வாளியில் பத்திரமாக போட்டுக்கொண்டு திருநெல்வேலியில் இருந்து கிளம்பி சென்னைக்கு கொண்டு சென்று கொண்டிருப்பார். காரணம் இருந்தால் சென்னையில் இரண்டு நாள் கூட தங்க வேண்டியிருக்கும். இது போன்று பல அதிசயங்களையும் அமானுஷ்யங்களையும் இந்த துறை.. பணியுமாம் என்றும் பெருமை அணியுமாம் சிறுமை தன்னை வியந்து என்ற திருக்குறளுக்கு ஏற்ப அதன் இயல்பு மாறாமல் பயணித்துக் கொண்டிருக்கும். காவல்துறையை தேர்ந்தெடுத்தவர்கள் அதன் கம்பீரத்திற்காகவும் பெருமைக்காகவும் கௌரவத்திற்காகவும் தான் அதிகம். நிறைய இன்னல்கள், ரணங்கள், தியாகங்கள், அர்ப்பணிப்புகள் இருக்கும் என்று இதை தேர்ந்தெடுத்த எல்லாருக்கும் தெரியும். இருந்தாலும் மேற்சொன்ன அந்த விஷயங்கள் தான் இவர்களை இந்த துறையை தேர்ந்தெடுக்க வைத்திருக்கிறது. இப்போது தலைப்பிற்கு வருவோம். பெருமைக்காகவும் கௌரவத்திற்காகவும் அடையாளத்திற்காகவும் , பல இன்னல்களையும் ரணங்களையும் தியாகங்களையும் அர்ப்பணிப்போடு ஏற்றுக்கொண்டு வந்தவர்கள் தற்போது நிற்கதியாய் நிற்கின்றனர். எந்த பெருமைக்காக இந்தத் துறைக்கு வந்தார்களோ அது இன்று சிறுமைப்படுத்தப்பட்டிருக்கிறது. எந்த கௌரவத்திற்காக இந்த வேலைக்கு வந்திருக்கிறார்களோ அந்த கௌரவம் தற்போது காணாமல் போயிருக்கிறது. எந்த அடையாளத்திற்காக இந்த வேலைக்கு வந்தார்களோ அந்த அடையாளம் தற்போது தகர்க்கப்பட்டிருக்கிறது. அப்படியானால் இவர்கள் தினம் தினம் செய்கின்ற தியாகங்களும் சந்திக்கின்ற இன்னல்களும் பணியினால் வருகின்ற ரணங்களும் குடும்பத்தை விட்டு வேலை பார்க்கும் அர்ப்பணிப்புகளும் யாருக்காக எதற்காக என்ற மிகப்பெரிய கேள்வி எழுகிறது. இப்படியான நகர்வில் சமுதாயம் தான் இவர்களின் பணிகளை அங்கீகரிக்கவில்லை என்றால். அப்புறம் எதற்காக இவர்களது தூங்காத இரவுகள் யாருக்காக பயணப்பட்டு கொண்டிருக்கிறது.. என்னது தூங்காத இரவுகளா.. அப்படி எல்லாம் பணி செய்கிறார்களா என்று ஆச்சரியம் வருகிறதா. வேறு எந்த அரசு ஊழியரும் இப்படி தூங்காத இரவுகளை கழிக்கின்றனறா என்றால் .. அதற்கான விடை பெரும்பாலும் இல்லையென்றே சொல்லலாம்.. ஒரு சில அரசு துறைகளில் இரவு பணிகள் இருந்தாலும் அதற்கு மாற்றாக மருந்தாக அடுத்த நாள் கண்டிப்பாக ஓய்வாக தான் இருக்கும்.. ஆனால் காவல்துறையில் அப்படி இல்லை இருக்கவும் முடியாது.. காவலர்கள் குறிப்பாக இன்றைய ரோந்து காவலர்கள் ஒவ்வொருவரும் ஒரு நாள் விட்டு ஒரு நாள் இரவு பணி செய்கிறார்கள் அதுபோக அடுத்த நாளும் பணிக்கு வந்து விடுகிறார்கள் சராசரியாக ஒரு மாதத்திற்கு 15 முதல் 16 இரவுகள் தொடர்ச்சியாக கண்விழிக்கிறார்கள். இப்படி தொடர்ச்சியாக கண்விழிப்பதன் காரணமாக அவர்களது இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிப்படைகிறது. உடற்கூறு இயக்கங்கள் மாற்றமடைகிறது. உறுப்புகள் ஊறு விளைவிக்கிறது. வளர்சிதை மாற்றங்கள் முன்னுக்குப் பின் முரண்டு பிடிக்கிறது. இவர்களது ஓய்வு நேரமும் ஒரு முழுமை அடையாமல் செல்போன் ஒலியின் காரணமாக விழிப்பு நிலையிலேயே கண்கள் தொடர்ந்து பயணிக்கிறது. இந்த தொடர் விழியா பயணமானது ஒரு மாதம் இரண்டு மாதம் அல்ல ஆண்டு கணக்கில் தொடரும்போது மொத்த காவல் துறையின் உடல் நலன் முற்றிலுமாக சேதாரம் அடைந்து மனித வள ஆற்றல் இழந்து பல்வேறு வியாதிகளுக்கு உள்ளாகி இதுவரை சம்பாதித்த பணமும் விரையம் ஆகி வெகு விரைவில் உருகி காணாமல் போய்விடுவார்களோ என்ற அச்சம் ஏற்படுகிறது. தொடர் இரவு பகல் பணியால் குடும்பத்திலும் இவர்கள் மீது பற்றும் பயனும் இல்லாமல் பந்தாடப்படுகிறார்கள். சமுதாயம் தான் இவர்களை அங்கீகரிக்கவில்லை என்றால் குடும்பமும் தற்போது உடல் நிலையும் சேர்ந்து கொண்டு இவர்கள் மீது சவாரி செய்கிறது.. இவர்களது விழியானது தொடர்ந்து அதன் பயணங்களில் பல வலிகளை வாங்கிக் கொண்டும் தாங்கிக் கொண்டு சுமந்து கொண்டும் நில்லாமல் ஓடிக்கொண்டிருக்கிறது.
வலியோடு விழி இமைக்கா இரவுகளாய் என்று வரை என்ற காரணம் தெரியாமல்.. யாருக்காக எதற்காக என்ற விடை தெரியாமல்…
ஒரு ராணுவ வீரருக்கு அவர் செய்யும் தியாகம் மக்களுக்கு தெரிகிறது புரிகிறது அதன் காரணமாக ஒரு வீட்டில் ஒரு ராணுவ வீரர் இறந்து விட்டாலும் அடுத்து அந்த வீட்டில் ராணுவ த்தின் மீதான வெறுப்பு ஒருபோதும் வந்தது இல்லை மாறாக அதே குடும்பத்தில் இருந்து அடுத்த வாரிசு ராணுவத்தை நோக்கி செல்லும்… ஆனால் இதேபோன்று ஒரு தியாகம் தான் காவல்துறையும்.. ஆனால் தற்போது அப்படியான மனம் இருக்கிறதா என்ற இல்லை.. எந்த ஒரு காவலர் மகனும், காவல் அதிகாரியின் மகனும் கண்டிப்பாக காவல்துறை வேண்டவே வேண்டாம் என்று கூறுகிறார்கள்.. அந்த துறையில் பணிபுரியும் காவலர்களும் காவல் அதிகாரியின் மனங்களும் அப்படித்தான்..
இந்தக் கேள்விகளுக்கெல்லாம் என்று விடை தெரிகிறதோ அன்றுதான் இந்த விழியின் வலிக்கு ஒரு நிவாரணம் கிடைக்கும்
என்றும் காவல் பணியில்..
விழியின் வலியோடு..
தியாகபிரியன்
சார்பு ஆய்வாளர்.
