
மதுரையில் பெண்களின் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தும் விதமாக புதிய ஏழு இளஞ்சிவப்பு ரோந்து வாகனங்கள்
20.11.2025-ந்தேதி காலை மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில், மாநகரில் பெண்கள் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தும் விதமாக 7 புதிய இளஞ்சிவப்பு ரோந்து (PINK PATROL) வாகனங்களை மாநகர காவல் ஆணையர் முனைவர் ஜெ.லோகநாதன் இ.கா.ப., அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் காவல் துணை ஆணையர் (தெற்கு), காவல் துணை ஆணையர் (வடக்கு), காவல் துணை ஆணையர் (போக்குவரத்து), காவல் துணை ஆணையர் (ஆயதப்படை) மற்றும் காவல் அதிகாரிகள் ஆகியோர் உடனிருந்தனர். மதுரை மாநகரில் உள்ள அனைத்து முக்கிய பகுதிகள், பெண்கள் பள்ளி மற்றும் கல்லூரி பகுதிகளில் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பெண் காவலர்கள் சுழற்சி முறையில் பணி அமர்த்தப்பட்டு ரோந்து பணிபுரிவார்கள். பெண்கள் மற்றும் குழந்தைகள் உதவி எண்களான 1091, 1098 மற்றும் காவல் கட்டுப்பாட்டு அறை 100 தொடர்பு கொள்ளும் போது இளஞ்சிவப்பு ரோந்து (PINK PATROL) வாகனத்தின் மூலம் விரைவாக சம்பவ இடத்திற்கு சென்று பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் விதமாக செயல்படுத்தப்பட உள்ளது.





