அரியலூர்: அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டியை அடுத்த காவேட்டேரி கிராமத்தில் உள்ள நரிக்குறவர் தெருவை சேர்ந்தவர் ராமராஜன்(26). இவருடைய மனைவி மீனா(20). இவர்களுக்கு ஒரு பெண் மற்றும் ஒரு ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் மீண்டும் கர்ப்பமாக இருந்த மீனாவுக்கு கடந்த நவம்பர் மாதம் 9-ந்தேதி ஒரு பெண் குழந்தை பிறந்தது.
இந்நிலையில் அந்த குழந்தை, கோவை மாவட்டம் ஜோதிபுரத்தை சேர்ந்த செல்வராஜ்(40) என்பவருக்கு தத்து கொடுத்தாக கூறி விற்கப்பட்டுள்ளதாக, அரியலூர் மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் யூனிஸ்கான், மீன்சுருட்டி போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
முதல் கட்ட விசாரணையில், செல்வராஜிக்கு குழந்தை இல்லாததால் அவர் மீனாவின் குழந்தையை விதிமுறைகளை பின்பற்றாமல் தத்து எடுத்ததாக தெரியவந்தது. இதையடுத்து ஜெயங்கொண்டம் துணை காவல் கண்காணிப்பாளர் கென்னடி, ஆய்வாளர் மணிவண்ணன் மற்றும் காவல்துறையினர் செல்வராஜிடம் இருந்து குழந்தையை மீட்டு, நேற்று முன்தினம் பெற்றோரிடம் ஒப்படைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக குழந்தையின் பெற்றோர் ஆகியோரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டது.
இதில், செல்வராஜிக்கு ரூ.75 ஆயிரத்திற்கு குழந்தை விற்கப்பட்டது தெரியவந்தது. இதில் ராமராஜனின் உறவினரான வடலூர் நரிக்குறவர் காலனி தெருவை சேர்ந்த சாரங்கபாணி(50) மற்றும் கடலூரை சேர்ந்த சித்த மருத்துவர் மெகர்பென்னிஷா(60) ஆகியோர் இடைத்தரகர்களாக செயல்பட்டதும், செல்வராஜின் உறவினரான ஓய்வு பெற்ற ஆசிரியர் அய்யாமோகன் குழந்தையை வாங்கி செல்வராஜிடம் கொடுத்ததும் தெரியவந்தது.
இதையடுத்து குழந்தையின் பெற்றோர் ராமராஜன், மீனா உள்ளிட்ட 6 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து, அவர்களை கைது செய்தனர். மேலும் இது போன்று குழந்தைகள் விற்கப்பட்டு உள்ளதா? என்பது குறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.