காஞ்சீபுரம்: காஞ்சீபுரத்தில் உள்ள ரவுடிகளை பணம் கேட்டு மிரட்டி, நாட்டு வெடிகுண்டுகளை வீசி கொலை செய்ய சதித் திட்டம் தீட்டப்படுவதாக சின்ன காஞ்சீபுரம் காவல் ஆய்வாளர் சரவணனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர், காவல் படையுடன் காஞ்சீபுரம் பி.எஸ்.கே. தெருவுக்கு விரைந்து சென்றார்.
அப்போது அங்கு ரவுடிகளை பணம் கேட்டு மிரட்டி, நாட்டு வெடிகுண்டுகளை வீசி கொலை செய்வதற்காக சதி திட்டம் தீட்டிக்கொண்டிருந்ததாக காஞ்சீபுரத்தை சேர்ந்த ரவுடிகளான ஹைதர்பேட்டை தெருவைச் சேர்ந்த மார்க்கெட் விக்கி என்ற விக்னேஷ் (24), சின்னகாஞ்சீபுரம், டோல்கேட், பட்டாளத்தெருவை சேர்ந்த டோல்கேட் விக்கி என்ற விக்னேஷ் (28) மற்றும் சின்ன காஞ்சீபுரம் பொய்யாகுளம் நேதாஜி தெருவைச் சேர்ந்த பவானி (49), அதே பகுதியை சேர்ந்த சுதா (23), தமிழ்ச்செல்வி (20), மீனாபிரியா (20) ஆகிய 4 பெண்கள் என 6 பேரையும் காவல்துறையினர் சுற்றி வளைத்து கைது செய்தனர்.
கைதான மார்க்கெட் விக்னேஷ் மீது கொலை வழக்கும், டோல்கேட் விக்னேஷ் மீது கொலை முயற்சி மற்றும் அடிதடி வழக்குகளும் உள்ளன.
கைதானவர்களிடம் இருந்து ஒரு மோட்டார் சைக்கிள், 2 பட்டாக்கத்திகள், நாட்டு வெடிகுண்டு தயார் செய்ய பயன்படுத்தக்கூடிய ஆணி, இரும்பு குண்டுகள், வெடிமருந்து, கூழாங்கல், கயிறு உள்ளிட்ட மூலப்பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் கைதான பெண்கள் உள்பட 6 பேரும் செங்கல்பட்டு குற்றவியல் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
அவர்களை 15 நாட்கள் காவலில் வைக்க கோர்ட்டு உத்தரவிட்டதையடுத்து அனைவரும் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.