
கோத்தகிரி அருகே சுருக்கில் சிக்கிய புலி தப்பிய நிலையில், வன விலங்குகளை வேட்டையாட சுருக்கு வைத்த நில உரிமையாளர் மீது வன விலங்குகள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகில் உள்ள உயிலட்டி கிராமப் பகுதியில் உள்ள தேயிலைத் தோட்டத்திற்கும் உருளைக்கிழங்கு பயிரிடப்பட்டுள்ள விளைநிலத்திற்கும் இடையில் உள்ள புதர் நிறைந்த சதுப்பு நிலப்பகுதியில் புலி ஒன்று சுருக்கு வலையில் சிக்கியது. வனத்துறையினர் மீட்புப் பணியில் இறங்கும் முன்பு புலி தாமாக விடுவித்துத் தப்பியது.
இந்நிலையில், வன விலங்குகளை வேட்டையாட சுருக்கு வைத்த காரணத்தால் நில உரிமையாளர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட வன அலுவலர் குருசாமி கூறியதாவது:
“கோத்தகிரி உயிட்டி பகுதியில் புலி சுருக்கில் சிக்கிய பகுதியில் 3 சுருக்குகள் இருந்தன. இவை காட்டுப்பன்றி உட்பட பிற வனவிலங்குகளை வேட்டையாட வைக்கப்பட்டுள்ளன. வனவிலங்குகளை வேட்டையாடுவது வனவிலங்குகள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் என்பதால், நில உரிமையாளர் நஞ்சுண்டன் மீது ஜாமீனில் வெளியே வர முடியாத வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தச் சட்டத்தின் கீழ் குற்றவாளிகளுக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை கிடைக்கும். நஞ்சுண்டன் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் விரைவில் கைது செய்யப்படுவார்.
கோத்தகிரி பகுதிகளில் புலிகள் நடமாட்டம் உள்ளது. புலிகள் நடமாட்டம் இருந்தால், அந்தப் பகுதிகளில் வனப்பரப்பு வளமாக உள்ளது என்று அர்த்தம். மேலும், தாவரப் பட்சிகளைக் கட்டுக்குள் வைக்கும். எனவே, மக்கள் இது குறித்து அச்சப்படத் தேவையில்லை.
புலிகள் நடமாட்டத்தைக் கண்காணிக்க கோத்தகிரி சரகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் 18 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், உயிலட்டி பகுதியில் சுருக்கில் சிக்கி தப்பிய புலியின் நடமாட்டம் ‘தெர்மல் டிரோன்’ மூலம் கண்காணிக்கப்படுகிறது”.
இவ்வாறு குருசாமி தெரிவித்தார்