
புதுச்சேரியில் நடைப்பயிற்சி மேற்கொண்ட கல்வி அமைச்சரின் செல்போனைப் பறித்துச் சென்ற வழக்கில் ஒருவரை போலீஸார் கைது செய்தனர்.
புதுச்சேரி கல்வி அமைச்சராக உள்ள கமலக்கண்ணன், காரைக்காலைச் சேர்ந்தவர். இவர் புதுச்சேரி வரும்போது தீயணைப்பு நிலையம் அருகில் உள்ள பொதுப்பணித்துறைக்குச் சொந்தமான இல்லத்தில் தங்குவது வழக்கம். அமைச்சர் கமலக்கண்ணன் கடந்த 2-ம் தேதி இரவு கடற்கரை சாலையில் செல்போனில் பேசியபடி நடைப்பயிற்சி மேற்கொண்டார்.
அப்போது பைக்கில் பின்தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் இருவர் அமைச்சரின் ரூ.20 ஆயிரம் மதிப்பிலான செல்போனை பறித்துக்கொண்டு தப்பிச் சென்றனர்.
இதுபற்றி போலீஸார் கூறுகையில் ‘‘அமைச்சருடன் பாதுகாப்பு அதிகாரி ரத்தினவேல் சென்றார். அப்போது அமைச்சரின் செல்போனை உடன் சென்ற ரத்தினவேல் கையில் வைத்திருந்தார். அச்சமயம் பின்தொடர்ந்து வந்த இரண்டு மர்ம நபர்கள் அமைச்சர் கமலக்கண்ணனின் செல்போனை ரத்தினவேல் கையில் இருந்து பறித்துச் சென்றனர்’’ என்றனர்.
பின்னர் இதுகுறித்து ஒதியஞ்சலை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனர். இதனிடையே டிஜிபி பாலாஜி ஸ்ரீ வத்ஸவா உத்தரவின் பேரில் சிறப்பு அதிரடிப்படை, ஒதியஞ்சாலை போலீஸார் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.
விசாரணையில் முதலியார்பேட்டை பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார் (21), சண்முகாபுரத்தைச் சேர்ந்த பாலா (எ) பாலகுமாரன் (24) ஆகியோர் அமைச்சரின் செல்போனைப் பறித்துச் சென்றது தெரியவந்தது.
இதனிடையே வழிப்பறி செய்யப்பட்டு விற்கப்பட்ட அமைச்சரின் செல்போனை போலீஸார் வில்லியனூரில் மீட்டனர்.
இந்நிலையில் தலைமறைவாக இருந்த பாலா (எ) பாலகுமாரனை நேற்று (மார்ச்-6) இரவு போலீஸார் கைது செய்தனர்.
தொடர்ந்து அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் டிப்ளோமா படித்துவிட்டு ஊர் சுற்றி வந்ததும், வழிப்பறி சென்ற அமைச்சரின் செல்போனை மேல் திருக்காஞ்சியைச் சேர்ந்த தினேஷ் என்பவரிடம் ரூ.4 ஆயிரத்துக்கு விற்றதும் தெரியவந்தது.
இதையடுத்து அவரிடம் இருந்த ஒரு இருசக்கர வாகனம் மற்றும் செல்போனை போலீஸார் பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை இன்று (மார்ச்-7) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர். தொடர்ந்து தலைமறைவாக உள்ள செந்தில்குமாரையும் தேடி வருகின்றனர்.