
கரோனா ஊரடங்கால் தவித்துவரும் ஏழை, எளிய மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை மதுரை காவல்துறை வழங்கியது.
மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் உத்தரவின் பேரில் சிலைமான் காவல் நிலையத்துக்கு உட்பட்ட சக்கி மங்கலம், எல்கேடி நகர், கண் பார்வையற்றோர் காலனியில் வசிக் கும் முதியோர், ஆதரவற்ற 20 ஏழை குடும்பங்களுக்கு தலா 5 கிலோ அரிசி, ஒரு கிலோ பருப்பு, எண்ணெய் உட்பட 15 வகையான காய் கறிகள் போன்ற அத்தியாவசியப் பொருட்களை கூடுதல் எஸ்பி வனிதா வழங்கினார்.
இதேபோன்று விரகனூர் பகுதியில்சாலையோரத்தில் கடை வைத்திருக்கும் உத்தரப் பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த 20 நபர்களுக்கு தலா 5 கிலோ அரிசி, 1 கிலோ கோதுமைமாவு, 1 கிலோபருப்பு, எண்ணெய் மற்றும் 15 வகையான காய்கறிகளை கூடுதல் எஸ்பியால் வழங்கப்பட்டது. மேலும், ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பதாக அறிந்து,
சிலைமான் அருகிலுள்ள நரிக்குறவர் காலனியில் வசிக்கும் நரிக்குறவர் அல்லாத இடம் பெயர்ந்த 20 ஏழை குடும்பங்களுக்கு தலா 5 கிலோ அரிசி, 1 கிலோ பருப்பு, எண்ணெய், காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சிகளில் ஊமச்சிகுளம் டிஎஸ்பி நல்லு, பயிற்சி டிஎஸ்பி பிரசன்னா, சிலைமான் காவல் ஆய்வாளர் மாடசாமி, மாவட்ட குழந்தைகள் நலக் குழுஉறுப்பினர் பாண்டிராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதற்கிடையில்,சமூக பாதுகாப்பு துறையின் கீழ் செயல்படும் கடச்சனேந்தல், சத்திரபட்டி குழந்தைகள் இல்லங்களுக்கு தேவையான கிருமி நாசினி, முகக் கவசம், சோப்பு உள்ளிட்ட பொருட்களை வழங்கிய மாவட்ட காவல்துறையினர், போதிய விழிப்புணர்வும் ஏற்படுத்தினர்.