பிரபல தனியார் நிறுவனத்தின் பெயரில் போலியாக பிஸ்கெட், கேக் தயாரித்து விற்பனை செய்த பிஹார் இளைஞர் கைது செய்யப்பட்டார்.
பிரபல தனியார் நிறுவனத்தின் பெயரில் பிஸ்கெட், ரஸ்க், கேக் உள்ளிட்டவைகள் போலியாக தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக அறிவுசார் சொத்துரிமை அமலாக்கப் பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து அந்த தனிப்பிரிவின் டிஎஸ்பி நீதிராஜன், ஆய்வாளர் விஜயலட்சுமி தலைமையிலான தனிப்படை போலீஸார் நேற்று முன்தினம் இரவு சென்னை முழுவதும் தேடுதல் வேட்டை நடத்தினர்.
கொளத்தூர், புத்தகரம், ஜெயலட்சுமி நகரில் உள்ள குடோன் ஒன்றில் சோதனை செய்தபோது அங்கு ஒரு பிரபல நிறுவனத்தின் பெயரில் போலியாக பிஸ்கெட், கேக், ரஸ்க் தயாரிக்கப்பட்டு விற்பனைக்காக அடுக்கி வைக்கப்பட்டிருந்து தெரியவந்தது. இதைத் தொடர்ந்து ரூ.6 லட்சத்து 98 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதுதொடர்பாக பிஹாரைச் சேர்ந்த நிக்கோலஸ் நூர்மூ (25) என்பவர் கைது செய்யப்பட்டார். குடோன் உரிமையாளரை போலீஸார் தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்ட நிக்கோலஸ் நூர்மூ சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்றக் காவலில் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.