நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சப்-இன்ஸ்பெக்டர் கொரோனா தொற்றுக்கு இறந்துள்ளனர்.
நெல்லை மாவட்டத்தில் கொரோனா இன்னும் கட்டுப்படுத்தப்படவில்லை.
கடந்த ஜூன் மாதம் நெல்லையை சேர்ந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் சாது சிதம்பரம் கொரோனாவால் இறந்தார். அதன்பிறகு காவல்துறையில் பலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்ட போதிலும் அனைவரும் சிகிச்சை முடிந்து பூரண உடல் நலத்துடன் வீடு திரும்பினர்.
இந்த நிலையில் 2 மாதத்திற்கு பிறகு நெல்லையில் கொரோனாவுக்கு போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் இறந்துள்ளார். அவரதுபெயர் முருகன்(வயது 57). நெல்லை தச்சநல்லூர் கரையிருப்பை சேர்ந்தவர். தச்சநல்லூர் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ் பெக்டராக வேலை பார்த்து வந்தார்.
இவருக்கு கடந்த வாரம் வைரஸ் காய்ச்சல் மற்றும் இதய துடிப்பு அதிகரிப்பு காணப்பட்டது. இதனால் அவரை நெல்லை அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்று முதலில் முடிவு வந்தது.
ஆனால் அவருக்கு கொரோனா அறிகுறி இருந்ததால், சி.டி. ஸ்கேன் பரிசோதனை நடத்தினர். இதில் அவருக்கு கொரோனா தொற்றினால் நுரையீரல் பாதிக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து சப்- இன்ஸ்பெக்டர் முருகனுக்கு கொரோனா தொற்றுக்கும் இதய துடிப்பு சீராகவும் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனாலும் பலனின்றி நேற்று காலை அவர் பரிதாபமாக இறந்தார்.
நெல்லை மாவட்டத்தில் கொரோனாவுக்கு பலியான 2-வது போலீஸ் அதிகாரி இவர் ஆவார் .
