Police Department News

நெல்லை, தென்காசியில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 4 பேர் கொரோனாவுக்கு பலி

நெல்லை,

நெல்லை தச்சநல்லூர் கரையிருப்பை சேர்ந்தவர் முருகன் (வயது 57). இவர் தச்சநல்லூர் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார்.

இவருக்கு கடந்த வாரம் வைரஸ் காய்ச்சல் மற்றும் இதய துடிப்பு அதிகரித்தது. இதையடுத்து அவர் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். முதலில் நடத்திய பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்று தெரிவிக்கப்பட்டது.

பரிதாப சாவு

பின்னர் கொரோனா அறிகுறி இருந்ததால் சி.டி.ஸ்கேன் பரிசோதனை செய்யப்பட்டது. அதில் முருகனுக்கு கொரோனா தொற்றினால் நுரையீரல் பாதிக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர் கொரோனா வார்டில் சேர்க்கப்பட்டார்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று காலை முருகன் பரிதாபமாக இறந்தார்.

21 குண்டுகள் முழங்க…

அவரது உடலுக்கு நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் தீபக் டாமோர் மரியாதை செலுத்தினார். பின்னர் முருகன் உடல், கரையிருப்பு மயானத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. பணியில் இருந்தபோது முருகன் இறந்ததால் அவரது உடலுக்கு காவல்துறை சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

நெல்லை மாநகர போலீஸ் துணை கமிஷனர் சரவணன் தலைமையில் போலீசார் கரையிருப்பு மயானத்துக்கு சென்றனர். அங்கு போலீசார் பேண்டு வாத்தியத்துடன் 21 துப்பாக்கி குண்டுகள் முழங்க முருகன் உடல் தகனம் செய்யப்பட்டது.

மேலும் நெல்லை மாவட்டத்தில் நேற்று ஒரு போலீஸ்காரர், 100 நாள் வேலை திட்டத்தில் வேலை பார்த்த தொழிலாளர்கள் 10 பேர் உள்பட 108 பேருக்கு புதியதாக கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது. அவர்கள் பணியாற்றிய பகுதியில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. நெல்லை மாநகர பகுதியில் 27 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. மற்றவர்கள் நாங்குநேரி, சேரன்மாதேவி, களக்காடு, மானூர், ராதாபுரம், வள்ளியூர், அம்பை, பாளையங்கோட்டை புறநகர், பாப்பாக்குடி பகுதியை சேர்ந்தவர்கள் ஆவார்கள்.

இதனால் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்து 17-ஆக அதிகரித்து உள்ளது. இவர்களில் 9 ஆயிரத்து 724பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர். 1100 பேர் சிகிக்சை பெற்று வருகிறார்கள். 193 பேர் இறந்து உள்ளனர்.

மேலும் 3 பேர் பலி

தென்காசி மாவட்டத்தில் 81 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. நேற்று 3 பேர் இறந்து உள்ளனர். தென்காசி மாவட்டத்தில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்து 224 ஆகும். இதில் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியவர்கள் 5 ஆயிரத்து 502 பேர். 606 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 116 பேர் இறந்து உள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று 83 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனால் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 12 ஆயிரத்து 251 ஆக உயர்ந்து உள்ளது.

இதில் 11 ஆயிரத்து 432 பேர் முழுமையாக குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது அரசு ஆஸ்பத்திரிகள் மற்றும் வீடுகளில் 694 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் இதுவரை 119 பேர் கொரோனாவால் இறந்து உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.