
ஆலந்தூர்,
சென்னை வேளச்சேரி பவானி நகரை சேர்ந்தவர் பால்ராஜ் (வயது 21). இவர் மீது போதைப்பொருள் கடத்தல் தொடர்பான வழக்குகள் உள்ளன. இதற்கிடையே கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பரங்கிமலை போலீஸ் துணை கமிஷனர் முன் ஆஜராகி தான் திருந்தி வாழப்போவதாகவும், அடுத்த 2 ஆண்டுகளுக்கு எந்தவித குற்றச்செயல்களில் ஈடுப்பட மாட்டேன் என்றும் நன்னடத்தை உறுதி மொழி பத்திரம் எழுதிக் கொடுத்தார்.
இந்நிலையில் பால்ராஜ், கடந்த 31-ந் தேதி மீண்டும் குற்றச்செயலில் ஈடுபட்டதாக ஆதம்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலன் கைது செய்து சிறையில் அடைத்தார். இதையடுத்து நன்னடத்தை விதியை மீறிய பால்ராஜை 465 நாட்கள் சிறையில் அடைக்க பரங்கிமலை போலீஸ் துணை கமிஷனர் பிரபாகர் உத்தரவிட்டார்.
அதே போல் சென்னை கண்ணகிநகர் குடிசைமாற்று வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் முத்துவேல் (வயது 27). இவர் மீது ஒரு கொலைவழக்கு, 4 கொலைமுயற்சி வழக்கு உள்பட 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது. 2 முறை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழும் சிறை சென்று வந்துள்ளார்.
இந்த நிலையில் முத்துவேல் கடந்த மார்ச் மாதம் 2-ந்தேதி அன்று அடையார் துணை கமிஷனர் வி.விக்ரமன் முன்பு ஆஜராகி, ‘தான் திருந்தி வாழப்போவதாகவும், ஓராண்டு எந்தவொரு குற்றச்செயலிலும் ஈடுபட மாட்டேன்’ என்றும் நன்னடத்தை உறுதிமொழி பத்திரம் எழுதி கொடுத்தார். ஆனால் இந்த உறுதிமொழியை அவர் கடந்த 4-ந்தேதி மீறி மீண்டும் குற்றச்செயலில் ஈடுபட்டதால் செயல்துறை நடுவராகிய அடையார் துணை கமிஷனர் வி.விக்ரமன், ‘221 நாட்கள் ஜாமீனில் வெளியே வர முடியாத சிறை தண்டனை விதித்து’ உத்தரவிட்டார்.
