வேளச்சேரி சிறுமி மர்ம சாவில் திடீர் திருப்பம் ஆபாச படம் எடுத்து மிரட்டிய வாலிபரால் தூக்கிட்டு தற்கொலை செய்தது அம்பலம்: பரபரப்பு தகவல்
வேளச்சேரி: வேளச்சேரி காந்தி சாலையை சேர்ந்தவர் நாகராஜ். தனியார் நிறுவன ஊழியர். இவரது 13 வயது மகள், அங்குள்ள ஒரு தனியார் பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்தாள். கடந்த ஜூன் 14ம் தேதி இந்த சிறுமி வீட்டில் மர்மமான முறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாள். இதுகுறித்து தரமணி போலீசார் வழக்குப்பதிவு செய்து, சிறுமி தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்தனர். மேலும், சிறுமி பயன்படுத்திய செல்போனை ஆய்வு செய்தபோது, அதில், ஒரு எஸ்எம்எஸ் அழிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.அந்த எஸ்எம்எஸ் யாருடைய செல்போனில் இருந்து வந்தது என போலீசார் ஆய்வு செய்தபோது, நாகராஜ் வீட்டில் குடியிருந்த குணசீலன் (33) செல்போனில் இருந்து வந்தது தெரியவந்தது. விசாரணையில் அவர், சிறுமி இறந்த சில நாட்களிலேயே வீட்டை காலி செய்துவிட்டு, பெருங்குடி கல்லுக்குட்டை பகுதிக்கு சென்றது தெரிந்தது. அவரது வீட்டிற்கு சென்றபோது, தலைமறைவாகி இருந்தார். அங்கிருந்து அவர் செல்போனை ஆய்வு செய்தபோது, அதில் பல தகவல்கள், வீடியோ படங்கள் அழிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது.
சைபர் கிரைம் உதவியுடன் அழிக்கப்பட்ட படம், வீடியோக்களை போலீசார் மீட்டனர். அதில், இறந்த சிறுமியின் ஆபாச படங்கள் மற்றும் குணசீலன் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட வீடியோக்கள் இருந்தன. இந்நிலையில், மணப்பாறை பகுதியில் பதுங்கியிருந்த குணசீலனை நேற்று முன்தினம் தனிப்படை போலீசார் கைது செய்து, தரமணி காவல் நிலையம் கொண்டு வந்து விசாரித்தனர். அப்போது, அவர் அளித்த வாக்குமூலமாக போலீசார் கூறியதாவது: சிறுமியின் வீட்டில் குணசீலன் வாடகை இருந்தபோது, அவளின் பெற்றோருடன் அன்பாக பழகி உள்ளான். அவர்கள் இருவரும் வேலைக்கு செல்வதால், சிறுமியை தினசரி டியூஷன் அழைத்து சென்று வரும்படி இவனிடம் கூறியுள்ளனர்.பெற்றோர் வேலையில் இருந்து வரும் வரை, சிறுமியுடன் வீட்டில் இருந்துள்ளான். அப்போது, சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு, அதை செல்போனில் பதிவு செய்துள்ளான். பின்னர், அதை காண்பித்து சிறுமியை பாலியல் உறவுக்கு அழைத்துள்ளான். அதற்கு சிறுமி ஒத்துக்கொள்ளாததால், அந்த ஆபாச படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடப் போவதாக குணசீலன் மிரட்டியுள்ளான். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாள். இதையடுத்து, எதுவும் தெரியாததுபோல், சில நாட்களில் குணசீலன் அந்த வீட்டை காலி செய்து சென்றுள்ளார். இவ்வாறு போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து, குணசீலனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.