சென்னை பெருநகர காவல் ஆணையாளர் தலைமையில், குழந்தைகள் நல காவல் அதிகாரிகளுக்கு 3ம் நாள் பயிற்சி இன்று (28.9.2020) அளிக்கப்பட்டது .
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ் குமார் அகர்வால், இ.கா.ப. அவர்களின் தலைமையில், காவல்துறை கூடுதல் இயக்குநர் (தலைமையிடம்) திருமதி.சீமா அகர்வால், இ.கா.ப. அவர்களின் வழிகாட்டுதலின் பேரில், இளம் சிறார் நீதிச்சட்டம் (பராமரிப்பும் பாதுகாப்பும்)-2015, பாலியல் குற்றங்களிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம்-2012 மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து இதர சட்டங்களில் கூறப்பட்டுள்ள வழிமுறைகளைப் பின்பற்ற மேற்கு மண்டல குழந்தைகள் நல காவல் அதிகாரிகளுக்கு புத்தாக்கப் பயிற்சி அளிக்கவும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்றத்தடுப்புப் பிரிவின் துணை ஆணையாளர் திருமதி. H.ஜெயலஷ்மி அவர்கள் மேற்பார்வையில் இன்று (28.09.2020) 3ம் நாள் பயிற்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் தலைமை நன்னடத்தை அலுவலர் திரு.ஆல்பிரெட் டேவிட் அவர்கள், குழந்தைகள் நல கமிட்டி (CWC), சிறுவர் நீதிக் குழுமம் (JJB), குழந்தைகள் நல காவல் அலுவலர் (CPWO) மற்றும் நன்னடத்தை அலுவலர் (PO) ஆகியோரின் பணிகள் குறித்தும் குழந்தைகளை நடத்தும் செயல்முறைகள் மற்றும் நடைமுறைகள் குறித்து காவல் துறையினரின் பங்கு மற்றும் சம்பந்தப்பட்ட துறையினரின் நடைமுறைகள் குறித்தும் விரிவாக பயிற்றுவித்தார்.
அவரைத் தொடர்ந்து, உயர்நீதிமன்ற வழக்கறிஞர் திருமதி.ஆதிலஷ்மி அவர்கள், POCSO சட்டங்களிலுள்ள தண்டனைகள், விதிமுறைகள் பற்றியும் விசாரணை நடைமுறை மற்றும் குழந்தைகளை கையாளும் விதம் குறித்தும், சட்டத்திற்கு முரணான செயல்களில் ஈடுபடும் குழந்தைகள் மற்றும் பராமரிப்பும், பாதுகாப்பும் தேவைப்படும் குழந்தைகள் ஆகியோரை வழிநடத்தும் முறைகள் குறித்தும், மிகத் தெளிவாகவும் விரிவாகவும் எடுத்துரைத்தார்.
அதைத் தொடர்ந்து நடந்த குழு விவாதத்தில் திரு. பிரான்சிஸ் சேவியர் (CWC), திருமதி. சூரியகலா (DCPO), திருமதி. லோகநாயகி (JJB), Ms.வித்யா ரெட்டி (துளிர் NGO), திரு. ஆன்ட்ரு ஆபிரகாம் (Child Line), திரு.ஆன்ட்ரு ஜேசுராஜ் (Loyola College Child Social Activist) ஆகியோர் குழந்தைகள் சம்பந்தப்பட்ட அனைத்து சட்டங்களிலும் கூறப்பட்ட விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு. மகேஷ் குமார் அகர்வால், இ.கா.ப அவர்கள், நம் குழந்தைகள் தவறு செய்யும் போது மன்னிப்பது போல அனைவரும் மற்ற குழந்தைகளையும் மன்னித்து நல்ல வழிகாட்ட வேண்டும் என்றும், குழந்தைகளை நல்வழிப்படுத்துவதே நமது கடமை என்பதற்காகவே குழந்தைகள் நல காவல் அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளீர்கள் என்றும் அறிவுரை வழங்கினார்.
மேலும், கடந்த மாதம் அடையாறு பகுதியில் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்ட 46 இளம் சிறார்களை கண்டறிந்து அவர்களுக்கு வாழ்வாதார பயிற்சிகள் மற்றும் வாழ்க்கை முன்னேற்றத்திற்கான திறன் பயிற்சிகள் வழங்கப்பட்ட நிகழ்வை சுட்டிக்காட்டினார். அடுத்ததாக, மயிலாப்பூரிலும் இதேபோல் உள்ள குழந்தைகளை கண்டறிந்து அவர்களுக்கும் பயிற்சி வழங்கப்படும் என்றார். மேலும் சென்னை முழுவதும் சட்டத்திற்கு முரணான செயல்களில் ஈடுபடும் குழந்தைகளை கண்டறிந்து அவர்களுக்காக இத்தகைய பயிற்சி தொடர்ந்து வழங்கப்படும் என்றும் அதற்காக சிறப்பு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு, அவர்கள் மூலம் சட்டத்திற்கு முரணான செயல்களில் ஈடுபடும் குழந்தைகள் கண்காணிக்கப்பட்டு அவர்களுக்கு வேண்டிய அனைத்து வகையான உதவிகளையும் செய்ய வேண்டும் என்றும் அறிவுரை வழங்கினார்.
3ம் நாள் பயிற்சியின் நிறைவு பகுதியாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவின் துணை ஆணையாளர் திருமதி.எச்.ஜெயலஷ்மி அவர்கள் நன்றி தெரிவித்தார்.