மதுரையில் இன்று 10 டன் குட்கா மூடைகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதில் தொடர்புடைய லாரி ஷெட் மேலாளர்கள், ஓட்டுநர்கள் உள்பட 4 பேரை போலீஸார் கைது செய்தனர்.
மதுரை மாநகரிலிருந்து தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் போதைப்பாக்குகள் தென் மாவட்டங்களுக்கு சில்லறை விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுவதாக புகார் வந்தது.
அதன்படி மாநகர காவல் ஆணையாளர் பிரேம் ஆனந்த் சின்ஹா உத்தரவின்படி சட்டம் ஒழுங்கு துணை ஆணையர் சிவபிரசாத் அவர்கள் திலகர் திடல் C4, காவல் நிலைய ஆய்வாளர் கவிதா அவர்கள் தலைமையில் தனிப்படை அமைத்து குட்கா கடத்தும் கும்பலை தேடி வந்தனர்.
இந்நிலையில் மதுரை ரயில்வே ஜங்சன் பார்சல் சர்வீஸ் அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2 கன்டெய்னர் லாரிகள், ஒரு டாடா ஏஸ் வாகனங்களை சோதனை செய்ததில் 10 டன் குட்கா மூடைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அந்த லாரி ஓட்டுநர்கள் அளித்த தகவலின்படி வடக்கு மாசிவீதியில் உள்ள இர்பான் லாரிசெட்டில் 11 மூடைகளும், செல்வி டிரான்ஸ்போர்ட் லாரி செட்டிலிருந்து 5 மூடைகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
இர்பான் லாரி செட் மேலாளர் பாலமுருகன் (24), செல்வி டிரான்ஸ்போர்ட் மேலாளர் சூரியபிரகாஷ் (23) ஆகியோரிடம் விசாரணை செய்தனர்.
இதில், மதுரை பாரதியார் தெருவைச் சேர்ந்த லாரி உரிமையாளர்களான பழனிச்சாமி (50), அவரது மகன் கார்த்திக் ஆகியோர் தான் லோடுக்கு ஆர்டர் கொடுத்ததாகத் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக லாரி செட் மேலாளர்களான பாலமுருகன், சூரியபிரகாஷ், ஓட்டுநர்கள் துரைப்பாண்டி (63), பாலசுப்ரமணி (35) ஆகிய 4 பேரை கைது செய்தனர்.
கைப்பற்றப்பட்ட குட்கா மூடைகள் மற்றும் கன்டெய்னர் லாரி, டாடா ஏஸ் வாகனம் ஆகியவற்றை உணவுப் பொருட்கள் பாதுபாப்புத் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இக்குற்றச் சம்பவத்தில் தொடர்புடைய பழனிச்சாமி, அவரது மகன் கார்த்திக் ஆகியோரை தனிப்படையினர் தேடி வருகின்றனர்.