
பொன்னேரி அருகே தாயைஅவதூறாக பேசிய தந்தையை அடித்துக் கொலை செய்தது தொடர்பாக மகன் கைது செய்யப்பட்டார்.
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருகே உள்ளதிருஆயர்பாடி, கல்லுக்கடைமேடு பகுதியை சேர்ந்தவர்ரவி (48). கூலி தொழிலாளியான இவரது மனைவி ராணி. இத்தம்பதிக்கு அஜித்குமார்(29), சுதாகர்(22) என இரு மகன்கள் உள்ளனர். ரவி தன் மனைவியின் நடத்தைமீது சந்தேகமடைந்து, அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்ததோடு, நாள்தோறும் மதுபோதையில் மனைவியை அடித்து, துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது.
இதனால் மனவேதனை அடைந்த ராணி, தன்2 மகன்களுடன் கல்லுக்கடைமேடு பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தார்.
இச்சூழலில், பொன்னேரியில் மூத்த மகன் அஜித்குமாரின் காய்கறிக் கடையில் நேற்று முன்தினம் மாலை ராணி இருந்தார். அப்போது அங்கு மதுபோதையில் வந்தரவி, தன் மனைவியை அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது.
இதையறிந்து, சம்பவ இடம் வந்த ரவியின் 2-வதுமகன் சுதாகருக்கும், ரவிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அந்த வாக்குவாதம் முற்றியதன் விளைவாக, சுதாகர் காய்கறி கடையில் கிடந்த இரும்பு ராடால் ரவியின் தலையில் அடித்துள்ளார்.
மருத்துவமனையில் அனுமதி
இதில், படுகாயமடைந்த ரவி பொன்னேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, முதலுதவி சிகிச்சைபெற்றார். தொடர்ந்து, சென்னை ஸ்டான்லி அரசுமருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த ரவி, நேற்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த பொன்னேரி போலீஸார் சுதாகரை கைது செய்தனர்.