சென்னை: சென்னை கொளத்தூர் நகைக்கடையில் நடந்த கொள்ளை வழக்கில் சம்பந்தப்பட்ட முக்கிய குற்றவாளியான பிரபல கொள்ளையன் நாதுராம் மற்றும் அவரது கூட்டாளிகளான பக்தாராம், தினேஷ்சவுத்ரி ஆகியோரை ராஜஸ்தான் காவல்துறையினர் கைது செய்தனர். இந்த விவரம் அறிந்தவுடன் தமிழக காவல்துறையினர் 3 பேரையும் சென்னை அழைத்து வந்து சிறையில் அடைத்தனர்.
நாதுராம் உள்ளிட்ட 3 பேரையும் 10 நாள் காவலில் எடுத்து விசாரிக்க எழும்பூர் 13-வது கோர்ட்டு மாஜிஸ்திரேட்டு கோபிநாத் அனுமதி அளித்தார்.
இதையடுத்து நேற்று முன்தினம் 3 பேரும் காவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டனர். அவர்களிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள், காவல்துறையினரிடம் கூறிய விவரங்கள் வருமாறு:-
நாங்கள் முதல் முதலில் மாதவரத்தில் ஒரு வீட்டில் கொள்ளையடித்தோம். அதன் பின்பு நகைக்கடைகளை மட்டும் நோட்டமிட்டு ஆந்திர மாநிலம் ஐதராபாத் மற்றும் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் 20 கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு உள்ளோம்.
பெங்களூருவில் நடந்த ஒரு கொள்ளையில் எங்களை பெங்களூரு காவல்துறை கைது செய்தனர். நாங்கள் ஜாமீனில் வெளியே வந்து கிருஷ்ணகிரியில் உள்ள பிரபல நகைக்கடை ஒன்றை நோட்டமிட்டோம்.
அந்த நகைக்கடை உரிமையாளரிடம் கடையின் மேலே உள்ள ஒரு கடையை வாடகைக்கு கேட்டோம். அவர் தரமறுத்ததால் கொளத்தூர் அருகே உள்ள லட்சுமிபுரத்தில் உள்ள நகைக்கடை மேலே உள்ள கடையை வாடகைக்கு எடுத்து துளை போட்டு கொள்ளையடித்தோம்.
சென்னை சவுகார்பேட்டை என்.எஸ்.சி. போஸ் தெருவில் உள்ள நகை அடகு கடையில் 1¾ கிலோ நகைகளை விற்று பணத்தை வாங்கினோம். அங்கிருந்து பெங்களூரு சென்று 1 கிலோ நகைகளை அங்குள்ள ஒரு அடகு கடையில் விற்றோம். நகைகளை விற்று கிடைத்த பணத்தை எடுத்துக்கொண்டு ராஜஸ்தானுக்கு 6 ரெயில்கள் மாறி மாறி தப்பிச்சென்றோம்.
இவ்வாறு அவர்கள் கூறியதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
அவர்கள் கொடுத்த தகவலின்பேரில் நகைகளை வாங்கிய 2 அடகு கடைக்காரர்களையும் காவல்துறையினர் அழைத்து வந்து விசாரணை செய்து வருகின்றனர். நேற்று அண்ணாநகர் துணை ஆணையர் சுதாகர், அவர்கள் 2 பேரையும் அழைத்துச்சென்று நகைகளை மீட்கும் நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டு உள்ளார்.