நாகபட்டினம்: நாகை மாவட்டம் நாகூர் அருகே உள்ள வாஞ்சூர் சோதனை சாவடியில் நேற்று அதிகாலை மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது காரைக்கால் பகுதியில் இருந்து வேகமாக வந்த ஒரு காரை காவல்துறையினர் மறித்தனர். ஆனால் அந்த கார் நிற்காமல் திட்டச்சேரி சாலையில் சென்றுள்ளது. இதையடுத்து காவல்துறையினர் வாகனத்தில் அந்த காரை விரட்டி சென்று திட்டச்சேரியை அடுத்த கொந்தை பகுதியில் மடக்கி பிடித்தனர்.
பின்னர் காரில் சோதனை மேற்கொண்டபோது, அதில் சுமார் ரூ.1½ லட்சம் மதிப்புள்ள புதுச்சேரி மாநில மதுபாட்டில்கள் இருந்தது. இதையடுத்து காவல்துறையினர் காரையும், காரில் வந்தவர்களையும் நாகையில் உள்ள மதுவிலக்கு அமலாக்க பிரிவு அலுவலகத்திற்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில் காரில் வந்தவர்கள் புதுக்கோட்டை மாவட்டம் லட்சுமி நகர் பகுதியை சேர்ந்த சந்திரன் மகன் தங்கப்பாண்டி (32), அவரது தம்பி கார்த்திகேயன் (29), மேல 4-வது தெருவை சேர்ந்த ராமராஜ் மகன் சரவணன் (23), காமராஜபுரம் பகுதியை சேர்ந்த முருகேசன் மகன் பார்த்தசாரதி (24) என்பதும், இவர்கள் மேலவாஞ்சூர் பகுதியில் உள்ள ஒரு மதுபான கடையில் இருந்து மதுபாட்டில்களை வாங்கி கடத்தி வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து காவல்துறையினர், மதுபாட்டில்கள் கடத்தி வந்த 4 பேரையும் கைது செய்தனர். மேலும், மதுபாட்டில்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்தனர். கார் மற்றும் மதுபாட்டில்களின் மதிப்பு சுமார் ரூ.10 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.