சென்னையில் இன்று ஒரேநாளில் 5 ரவுடிகள் சரணடைந்துள்ளனர்.
ரவுடி பினு பிறந்தநாள் கொண்டாட்டத்தில் 76 ரவுடிகள் கைது செய்யப்பட்டபோது கைப்பற்றப்பட்ட 88 செல்ஃபோன் எண்கள் மற்றும் உரையாடல்கள் மூலம் ரவுடிகளின் ரகசிய இருப்பிடங்கள், தொடர்புகள் உள்ளிட்டவை கண்டுபிடிக்கப்பட்டன. பல்வேறு இடங்களில் ரவுடிகளை கைது செய்ய போலீசார் நெருங்கத் தொடங்கிய நிலையில் ரவுடி பினு, அவனது எதிர்த் தரப்பு ரவுடியான அரும்பாக்கம் ராதா மட்டுமன்றி இரு தரப்பு ரவுடிகள் பலரும் சரணடைந்து வருகின்றனர். அந்த வகையில் சென்னையில் இன்றுமட்டும் 5 ரவுடிகள் சரணடைந்துள்ளனர்
தேனாம்பேட்டை ஆய்வாளர் கிரிக்கு கொலை மிரட்டல் விடுத்த சிடி மணியுடன் சேர்ந்து தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் பெட்ரோல் குண்டு வீசவும் திட்டமிட்டிருந்ததாக அண்மையில் சரணடைந்த ரவுடி தவக்கள பிரகாஷ் தெரிவித்தான். இதையடுத்து சிடி மணியின் கூட்டாளிகளை போலீசார் தீவிரமாகத் தேடிவந்தனர். இந்நிலையில் இன்று சிடி மணியின் முக்கிய கூட்டாளியான எம்.ஜி.ஆர். நகரைச் சேர்ந்த ராம்குமார் தேனாம்பேட்டை காவல் நிலையத்திலும், சிடிமணியின் ஓட்டுநரும் மற்றொரு கூட்டாளியுமான சி.ஐ.டி. நகரைச் சேர்ந்த ஹரி கோட்டூர்புரம் காவல் நிலையத்திலும் சரணடைந்தனர்.
இதேபோன்று ரவுடி பினுவின் முக்கிய கூட்டாளிகளான கனகு, விக்கி, சரவணன் ஆகியோர் திருமுல்லைவாயில் காவல் நிலையத்தில் இன்று சரணடைந்தனர். பினுவின் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது போலீசாரிடம் பிடிபடாமல் தப்பிச் சென்ற விக்கி, கனகு ஆகியோர் மீது வழிப்பறி, மாமூல் கேட்டு மிரட்டுதல் உள்ளிட்ட வழக்குகள் உள்ளன.
போலீசார் தங்கள் இருப்பிடங்களுக்கு வந்து கைது செய்துவிட்டால் தங்களது ரகசிய இருப்பிடங்கள், தொடர்புகள், செயல்பாடுகள் உள்ளிட்டவை அம்பலமாகிவிடும் என்பதால், ரவுடிகள் தங்கள் குற்ற நடவடிக்கைகள் தொடர்பான தடயங்களை முன்கூட்டியே மறைத்துவிட்டு தாங்களாகவே வந்து போலீசாரிடம் சரணடைந்துவிடுவதாக போலீசார் தெரிவிக்கின்றனர். கைது செய்ய போலீசார் எடுக்கும் நடவடிக்கைகள் காவல்துறையில் உள்ள சிலரால் முன்கூட்டியே தெரிவிக்கப்படுவதாகவும், இதனால் எச்சரிக்கையடையும் ரவுடிகள் சரணடையும் தந்திரத்தை கையாளுவதாகவும் போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.