கொள்ளை வழக்குகளில் துப்புதுலக்கி ரூ.1½ கோடி பொருட்கள் பறிமுதல்; திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி. முத்துசாமி தகவல்.
திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த ஓராண்டில் நடந்த குற்றங்கள், அதுதொடர்பாக கைதானவர்கள் குறித்து திண்டுக்கல் சரக போலீஸ் டி.ஐ.ஜி. முத்துசாமி கூறியதாவது:-
திண்டுக்கல் மாவட்டத்தில் 2020-ம் ஆண்டில் பாலியல் குற்றவாளிகள் 7 பேர், போதை பொருள் கடத்தல் மற்றும் விற்பனை செய்தவர்கள் 23 பேர், மணல் கடத்தலில் ஈடுபட்டவர்கள் 9 பேர் உள்பட மொத்தம் 95 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 2019-ம் ஆண்டு 76 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். அதை விட 19 பேர் 2020-ம் ஆண்டில் கூடுதலாக குண்டர் சட்டத்தில் கைதானது குறிப்பிடத்தக்கது.
மேலும் கூட்டு கொள்ளை, கொள்ளை, வழிப்பறி, திருட்டு என மொத்தம் 259 வழக்குகள் பதிவாகின. அதில் 151 வழக்குகளில் துப்புதுலக்கி கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் கொள்ளையர்களிடம் இருந்து ரூ.1 கோடியே 56 லட்சத்து 66 ஆயிரத்து 285 மதிப்பில் பொருட்கள் மற்றும் பணம் பறிமுதல் செய்யப்பட்டு இருக்கிறது.
இதுதவிர போதை பொருள் கடத்தல் தொடர்பாக 178 வழக்குகள் பதிவாகி உள்ளன. அதில் 692 கிலோ 260 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனை தொடர்பாக 669 வழக்குகள் பதிவாகின. அதில் ரூ.9 லட்சத்து 81 ஆயிரத்து 444 மதிப்பில் 2 ஆயிரத்து 628 கிலோ 435 கிராம் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. புத்தாண்டில் போலீசார் விவேகமாகவும், துரிதமாகவும் செயல்பட்டு குற்றம், சாலை விபத்துகளை தடுப்பதில் அக்கறையுடன் செயல்படுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.