மது அருந்திவிட்டு தினமும் தம்மை அடித்து துன்புறுத்தும் குடிகார அப்பா தனக்கு வேண்டாம் என தெலங்கானா மாநிலத்தில் 11 வயது சிறுவன், காவல் நிலையத்தில் கதறி அழுத சம்பவம் போலீஸாரை நெகிழச் செய்தது.
தெலங்கானா மாநிலம் கரீம்நகர் மாவட்டத்தில் உள்ள மாத்கால கூடம் பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீநிவாஸ். கூலித் தொழிலாளியான இவருக்கு, ரம்யா என்ற மனைவியும், சசிகுமார் (11) என்கிற மகனும், ஒரு மகளும் உள்ளனர். சசிகுமார், அதே பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறான். குடிப்பழக்கம் உள்ள ஸ்ரீநிவாஸ், தினமும் மது அருந்திவிட்டு தனது மனைவி மற்றும் பிள்ளைகளை அடித்து வருவதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், ஜம்முகுண்டா காவல் நிலையத்துக்கு நேற்று சென்ற சிறுவன் சசிகுமார், தனது தந்தை மீது புகார் அளித்தான். அப்போது அந்த சிறுவனிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது, அந்த சிறுவன் கூறியதாவது:
எனது தந்தை ஸ்ரீநிவாஸ் தினமும் மது அருந்திவிட்டு, எனது அம்மாவையும், என்னையும் அடித்து துன்புறுத்துகிறார். அண்மையில், உருட்டுக் கட்டையில் மிளகாய் பொடியை தடவி என்னைக் கடுமையாக தாக்கினார். இதில், எனக்கு உடல் முழுவதும் காயங்கள் ஏற்பட்டன. அப்போது, எனது பெரியம்மா வந்துதான் என்னைக் காப்பாற்றினார். அப்பா தினந்தோறும் எங்களை அடிப்பதால், படிப்பில் என்னால் கவனம் செலுத்த முடியவில்லை. எனவே, இந்தக் குடிகார அப்பா எனக்கு வேண்டாம். என்னை வேறு எங்கேயாவது உள்ள விடுதியில் சேர்த்து படிக்க வையுங்கள் என்று அழுதபடியே சிறுவன் சசிகுமார் போலீஸாரிடம் கூறினார்.
சிறுவனின் கதறலைக் கண்டு நெகிழ்ச்சியடைந்த போலீஸார், அவனது தந்தை ஸ்ரீநிவாசை கைது செய்தனர். சசிகுமாரை விடுதியில் தங்கி படிக்க வைக்க ஏற்பாடு செய்வதாகவும் போலீஸார் உறுதியளித்தனர்.