Police Department News

திருக்கோவிலூர் அருகே தலித் சிறுவன் கொலையான சம்பவம்: தாய், சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை நிகழ்ந்ததாக புகார்- ஆதிதிராவிடர் நல தேசிய ஆணையத்தின் அதிகாரி ஆய்வு

விழுப்புரம் விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே தலித் சிறுவன் கொலை செய்யப்பட்ட சம்பவத்தின்போது, அவரது தாய் மற்றும் சகோதரி ஆகியோர் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள வெள்ளம்புத்தூர் கிராமத்தைச் சேர்ந்த ஏழுமலை என்பவருக்கு மனைவியும், 8-ம் வகுப்பு படிக்கும் மகளும் உள்ளனர். மேலும், சமயன் என்ற 4-ம் வகுப்பு படித்துவந்த மகன் இருந்தார்.

கடந்த 21-ம் தேதி நள்ளிரவில் இவர்களது வீட்டுக்குள் புகுந்த ஒரு கும்பல் மனைவி, மகள் மற்றும் சமயன் ஆகிய 3 பேரையும் சரமாரியாக தாக்கியது. இதில் சிறுவன் சமயன் அதே இடத்தில் உயிரிழந்தான்.

இந்த சம்பவத்தின்போது ஏழுமலையின் மனைவியும், மகளும் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தற்போது இருவரும் சுய நினைவு இழந்த நிலையில் திருக்கோவிலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு, மருத்துவப் பரிசோதனை நடந்து வருகிறது.

இதுகுறித்து அரகண்டநல்லூர் காவல்நிலையத்தினர் வழக்குப்பதிவு செய்தனர். திருக்கோவிலூர் டிஎஸ்பி அசோக்குமார் தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் ஆதிதிராவிடர் நல தேசிய ஆணையத்தின் துணைத்தலைவர் முருகன் நேற்று சம்பவம் நடந்த வீட்டை ஆய்வு செய்தார். கிராம மக்களிடம் விசாரணை மேற்கொண்டார்.

பின்னர் ஆணையத்தின் துணைத்தலைவர் முருகன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

இது கொடூரமான சம்பவம். இதில் தொடர்புடையவர்கள் கைது செய்யப்படுவார்கள். இது 3-வது சம்பவம் என்கிறார்கள். ஏற்கெனவே மறைக்கப்பட்ட 2 சம்பவங்கள் மீதும் நடவடிக்கை எடுக்க காவல்துறையை கேட்டுக்கொள்கிறேன். காவல்துறையின் நடவடிக்கைகளை ஆணையம் கண்காணிக்கும். பாதிக்கப்பட்டவர்களுக்கு உயர் சிகிச்சை அளிக்கப்படும். பாதிக்கப்பட்டவர்கள் குடும்பத்தாருக்கு நஷ்ட ஈடு வழங்க அரசுக்கு பரிந்துரை செய்யப்படும் என்றார்.

இந்த ஆய்வின்போது மாவட்ட ஆட்சியர் சுப்பிரமணியன், காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் ப்ரியா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published.