இந்திராநகர் ரயில் நிலையம் அருகே கால் டாக்ஸியில் எரிந்த நிலையில் டிரைவர் பிணம் கிடந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
சென்னை திருவான்மியூரைச் சேர்ந்தவர் செல்லையா (48). கால் டாக்ஸி ஓட்டுநராக பிரபலமான ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். நேற்று பணிக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை, போனையும் எடுக்கவில்லை என்று அவரது மனைவி திருவான்மியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இன்று காலை திருவான்மியூர் போலீஸார் கால் டாக்ஸி நிறுவனத்தை தொடர்பு கொண்டபோது காரின் ஜிபிஎஸ் செல்லையா ஓட்டிய கார் இந்திரா நகர் ரயில் நிலையம் அருகே நிற்பதாகக் காட்டியது. அங்கு சென்ற போலீஸார் காரை கண்டுபிடித்தனர்.
காரை சோதனை செய்ததில், காரின் ஓட்டுநர் இருக்கையில் எரிந்த நிலையில் ஓட்டுநர் செல்லையா சடலமாகக் கிடந்துள்ளார். அவரது உடலில் வலக்கையில் தீக்காயம் இருந்துள்ளது. அவரை யாராவது கொலை செய்து அவரது காரின் டிக்கியிலேயே அடைத்துவைத்து சென்றிருக்கலாம் என தெரிகிறது. அவரது உடலை கைப்பற்றிய போலீஸார் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஓட்டுநர் செல்லையாவை கொலை செய்தது யார்? என கோட்டூர்புரம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.