கொலை நடந்த நேரத்தை கண்டுபிடிப்பது எப்படி?
கொலை வழக்குகளில் இறப்பு நிகழ்ந்த நேரத்தை கணிப்பது மிக முக்கியமான ஒன்றாகும். அது துப்பு துலக்குவதற்கு மட்டுமின்றி எதிரி குற்றவாளியா? இல்லையா? என்பதை நிரூபிக்கவும் உதவி செய்கிறது.
மரணம் நிகழ்ந்த பிறகு, பாக்டீரியாக்கள் சடலத்தின் திசுக்களை உண்ண ஆரம்பிக்கும் போது அவை துர்நாற்றம் வீசும் வாயுக்களை உற்பத்தி செய்கிறது. இந்த வாயுக்கள் திசுக்களின் அடியில் தங்குவதால் உடல் வீக்கமடைந்து விடுகிறது. சில சமயங்களில் இந்த வீக்கம் முகம் மற்றும் பாகங்களின் உருவ அமைப்பையே மாற்றி நெருங்கிய உறவினர்களால் கூட அடையாளம் காட்ட முடியாத அளவுக்கு சிதைத்து விடுகிறது.
மரணம் நிகழ்ந்து 36 மணி நேரத்துக்கு பிறகு சடலத்தின் இயற்கையான மற்றும் செயற்கையாக ஏற்பட்ட துவாரங்கள் (காயங்கள்) ஆகியவற்றில் ஈக்கள் முட்டை இடுகிறது. அடுத்த 24 மணி நேரத்தில், அந்த முட்டைகளிலிருந்து ‘லார்வாக்கள்’ எனப்படும் புழுக்கள் வெளிப்படுகிறது. அரிசியின் அளவே உடைய மண்புழு போன்ற தோற்றம் கொண்ட இந்த ‘லார்வாக்கள்’ சடலத்தின் மீது நெளிய ஆரம்பிக்கிறது. அடுத்த 4 அல்லது 5 நாட்களில் இந்த ‘லார்வாக்கள்’ பியூப்பா எனப்படும் கூட்டுப்புழுக்களாக மாறுகின்றன. அதற்கு அடுத்த 4 அல்லது 5 நாட்களில் ‘பியூப்பாக்கள்’ முழு வளர்ச்சி பெற்ற ஈக்களாகி பறந்து விடுகிறது. இதனடிப்படையில் மரணம் நிகழ்ந்த நேரத்தை தோராயமாக கணிக்கலாம்.
- சடலத்தின் மீது ஈக்களின் முட்டைகள் காணப்பட்டால் மரணம் சுமார் 36 மணி நேரத்துக்கு முன்னர் நிகழந்திருக்க வேண்டும்.
- சடலத்தின் மீது லார்வாக்கள் காணப்பட்டால் மரணம் நிகழ்ந்து 60 மணி நேரம் ஆகியிருக்கலாம்
- சடலத்தின் மீது ‘பியூப்பா’ எனப்படும் கூட்டுப்புழுக்கள் காணப்பட்டால் மரணம் 6 நாட்களுக்கு முன்பு நிகழந்திருக்க வேண்டும். பொதுவாக மரணம் நிகழ்ந்து 2 நாட்களுக்கு பின்னர் சடலத்தின் மீது லார்வாக்கள் தோன்றுகின்றன. பின்னர் அவை பியூப்பாவாக மாற 4 தினங்கள் பிடிக்கின்றன.
- சடலத்தின் மீது முழு வளர்ச்சி அடைந்து ஈக்களாகி பறந்து விட்ட பியூப்பாக்களின் காலியான வெளி ஓடுகள் மட்டுமே இருப்பின் மரணம் நிகழ்ந்து குறைந்தது 10 நாட்கள் ஆகி இருக்க வேண்டும்.
- இறப்பு நேர்ந்த பின் 3 நாட்கள் கழித்து நகங்கள் பிடிமானம் இழந்துவிடும்.
- அதேபோல் இறப்பு நிகழ்ந்து 4 நாட்கள் கழித்து பற்கள், ஈறுகளின் பிடிமானத்தை இழந்து ஆடத் தொடங்கும்.
- சடலத்தின் மூளைப் பகுதி திரவமாக மாறி விட்டிருந்தால், இறப்பு நிகழ்ந்து 5 நாட்கள் ஆகி இருக்க வேண்டும்.
- மரணம் நிகழ்ந்து 12 க்கும் 14 க்கும் இடைப்பட்ட நாட்களில் சடலத்தின் உள்ளே பாக்டீரியா நுண்ணுயிரிகளால் உருவாக்கப்படும் வாயுக்களால், வீக்கம் உச்சகட்டத்தை அடைந்து வயிறு வெடித்து விடும்.
- மரணம் நிகழ்ந்த பிறகு உடலின் தசைகளில் ஏற்படும் இரசாயன மாற்றங்களின் விளைவாக தசைகள் சுருங்கி விரியும் தன்மையை இழந்துவிடும். இந்த நிலை மரணம் நிகழ்ந்த மூன்றிலிருந்து 6 மணி நேரத்திற்குள் முழுமை அடையும்.
- ஆனால் நம் நாட்டில் வெப்பம் அதிகமாக இருப்பதால் 2 அல்லது 3 மணி நேரங்களில் மரண விறைப்பு நிலை ஏற்பட்டுவிடும்.
- குளிர் காலங்களில் விறைப்பு நிலை 24 முதல் 28 மணி நேரம் வரையிலும், கோடை காலத்தில் 18 லிருந்து 36 மணி நேரம் வரையிலும் நீடிக்கும்.
- பிரேத பரிசோதனையின் போது உடல் விறைப்பாகவும், அதன் தலையை, மார்பை நோக்கி வளைக்க முடியாத நிலையிலும் இருந்தால், மரணம் பிரேத பரிசோதனை செய்யப்படும் நேரத்திலிருந்து 6 முதல் 12 மணி நேரத்திற்கு முன்பாக நிகழ்ந்து இருக்க வேண்டும்.
- அசைவ உணவு அதிகமாகவும், காய்கறிகள் குறைவாகவும் சாப்பிட்ட உணவு 4 லிருந்து 5 மணி நேரத்திற்குள் முழுமையாக செரிக்கப்பட்டு, கழிவுகள் ஜீரணப் பாதையை விட்டு வெளியேறிவிடும். சைவ உணவு 6 லிருந்து 7 மணி நேரத்திற்குள் முற்றிலுமாக ஜீரணிக்கப்பட்டு கழிவாக மாறிவிடும்.
- படுக்கையில் இறந்து கிடப்பவரின் சிறுநீர்ப்பையில் சிறுநீர் நிறைய இருந்தால் அவர் படுத்த பின் சற்று நேரம் உயிரோடு இருந்திருக்கிறார் என்று அர்த்தம்.
- சடலத்தின் சிறுநீர் பை காலியாக இருந்தால் அந்த நபர் காலையில் எழுந்து சிறுநீர் கழித்த பிறகுதான் கொலை செய்யப்பட்டுள்ளார் என்று அர்த்தம்.
- சடலத்தின் பெருங்குடலில் உணவு முற்றிலுமாக செரிக்கப்பட்டு மலமாக இருந்தால், அந்த நபர் காலைக் கடன்களை கழிப்பதற்கு முன்னர் கொலை செய்யப்பட்டுள்ளார் என்று அர்த்தம்.
