Police Department News

போலீசுக்கு உதவும் துப்பறியும் நாய்கள்.

போலீசுக்கு உதவும் துப்பறியும் நாய்கள்.

துருவி, துருவி விசாரிப்பதாலும், நுட்பமான புலனாய்வாலும் போலீசார் கொலை, கொள்ளை வழக்குகளில் துப்பு துலக்குகிறார்கள். ‘சிறு துரும்பு’ கூட துருப்புச்சீட்டாய் மாறும். சில ஆண்டுகளுக்கு முன்பு, துருப்புச் சீட்டாக கிடைத்த பஸ்டிக்கெட், ஆத்துார் அணை பகுதியில் தாய்-குழந்தை கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகளை அடையாளம் காண உதவியது. ஆனால் இப்படி எல்லா வழக்குகளிலும் போலீசின் புலனாய்வு வெற்றியை தேடித்தராது.மதிநுட்பத்தோடு சதிகாரர்கள் அரங்கேற்றும் சம்பவங்கள் போலீசுக்கு பெரும் தலைவலியைத்தான் தரும். இக்கட்டான இச்சூழலை சமாளிக்க தடய அறிவியல் பிரிவு, கைரேகை பிரிவு போன்றவை போலீசுக்கு கை கொடுக்கின்றன. ஆறறிவு ‘மனித’ ஆற்றலால் இயங்கும் இப்பிரிவுகளை தவிர்த்து, மெச்சிக்கொள்ளும் மற்றொரு வகையில் ஐந்தறிவு படையும் போலீசுக்கு பெரும் துணையாக உள்ளது. அது ‘போலீஸ் துப்பறியும் நாய் படை’ பிரிவு. இப்பிரிவுக்கு மோப்ப நாயின் மூளைதான் மூலதனம்.மர்மமான கொலை, கொள்ளை வழக்குகளில் இப்பிரிவு பெரிதும் உதவுகிறது. அரசியல் தலைவர்கள், வி.ஐ.பி.,க்களின் பாதுகாப்பை உறுதி செய்வதிலும் துப்பறிவு நாய்களின் பங்கு முக்கியமானது. இப்பிரிவு, போதை பொருளை கண்டுபிடித்தல், வெடிகுண்டுகளை கண்டுபிடித்தல், ‘கிரைம்’களில் உதவுதல் என மூன்றுக்கும் தனித்தனியாக துப்பறியும் மோப்ப நாய்கள் பழக்கப்படுத்தப்படுகின்றன. நாய்களை பராமரிக்க தனித்தனி தங்கும் அறைகள் உள்ளன. அவற்றின். ஓய்வு நேரத்தை சுகமாக்க அறையில் மின்விசிறி உண்டு. நாய் ஒன்றுக்கு தினமும் தலா ரூ.200 வரை செலவிடப்படுகிறது. அதில் ‘மெனு’ப்படி உணவு, மருந்து வழங்கப்படுகிறது. நாய்களை கையாள பயிற்சி பெற்ற போலீசார் உள்ளனர். நாய்களுக்கு பயிற்சி அளிப்பது, கட்டளைகளை பின்பற்ற கற்றுக்கொடுப்பது, துப்பறிவு செயல்முறை பாடம் எடுப்பது, உணவு வழங்குவது, மருந்து கொடுப்பது ஆகிய பணிகளை மேற்கொள்கின்றனர். இவர்களின் கட்டளைக்கு நாய்கள் அப்படியே கட்டுப்படுவது ஆச்சர்யம்தான். பொதுவாக எஜமானனையும், அவரின் வீட்டையும் காக்கும் குணம் இயல்பிலேயே நாய்களுக்கு உண்டு. ஆனால் துப்பறியும் பணியை செய்வதில்லை. இது பழக்கத்தால் வருவது. போலீசார் பயன்படுத்தும் நாய்கள் கடுமையான பயிற்சிக்கு பிறகே துப்பறிவாளர்களாக ஜொலிக்கின்றன.பயிற்சி போலீசார் கூறியது:துப்பறிவு பிரிவுக்கு பதிவு செய்யப்பட்ட நாய் விற்பனை மையத்தில் இருந்து, 45 நாள் குட்டியாக இருக்கும்போது வாங்குகிறார்கள் நாயின் உடல் தகுதியை உறுதி செய்து, கால்நடை மருத்துவர் சான்றளிக்க வேண்டும். அதன் பிறகு துப்பறியும் பிரிவில் தங்கும் முறை, வெளியே கழிப்பிடம் செல்வது என ஒழுக்க பயிற்சி 6 மாதம் அளிக்கப்படும்..பின்பு, நாய்க்கும், அதன் கையாளுனர்களுக்கும்மையத்தில் 6 மாதம் பயிற்சி வழங்கப்படும். வெடிகுண்டு கண்டுபிடிக்கும் நாய்களுக்கு வெடிமருந்து ‘வாசனை’ பழக்கப்படுத்தப்படும். வெடிமருந்து எங்கிருந்தாலும் ‘மோப்ப’ சக்தியால் கண்டுபிடிக்கும் அளவுக்கு பயிற்சி கொடுக்கப்படும். அதன்பின் எத்தனை அடி ஆழத்தில் வெடிகுண்டு இருந்தாலும் கண்டுபிடித்துவிடும்.குற்ற சம்பவங்களில் மனிதனின் வாடை, உபயோகிக்கும் பொருட்களில் படியும் கை அல்லது கால்களின் வாடை, ரத்த, வியர்வை வாடை போன்றவற்றை மையப்படுத்தி பயிற்சி இருக்கும். இதன்பின், சம்பவத்தில் ஈடுபட்டோர் எந்த திசையில் ஓடினர் என கண்டறிந்து நாய்களால் ஓடமுடியும். பயிற்சிக்கு பிறகு மாவட்டங்களில் பணியை தொடங்கும். தினமும் அவற்றுக்கு பயிற்சி அளிப்பார்கள் .சமீபத்தில் திண்டுக்கல் நாகல்நகர் ரவுண்டானாவில் வாலிபர் வெட்டி கொல்லப்பட்டார். ரத்தக்கறை அரிவாளுடன் கொலையாளிகள் தப்பினர். சம்பவ இடத்தில் அரிவாளின் கைப்பிடித்துண்டு சிக்கியது. அதில் இருந்த குற்றவாளியின் உள்ளங்கை வாசனையை நுகர்ந்தபடியே, துப்பறியும் நாய்கள் இரண்டரை கி.மீ., சென்று குரைத்தது. அங்கு இருந்த சிலர், ரத்தக்கறையுடன் அவ்வழியாக கொலையாளிகள் தப்பி சென்றதாக தெரிவித்தனர். உடனே சில கி.மீ.,க்கு அப்பால் அதே பாதையில் தற்காலிக வாகனச்சோதனை அமைத்து அரை மணி நேரத்தில் கொலையாளிகளை போலீசார் மடக்கினர். உதவிய நாய்களுக்கும் அதை கையாளும் போலீஸ்காரர்களுக்கும் பாராட்டு குவிந்தது. இதுபோன்ற உதாரணங்களை அடுக்கிக்கொண்டே செல்லலாம்.
உணவு பட்டியல் இந்த ஐந்தறிவு துப்பறிவாளர்களுக்கு தினமும் இரு வேளை உணவு வழங்கப்படுகிறது. காலை உணவு 8:00 முதல் 8:30க்குள் முடிந்துவிடும். ஒவ்வொன்றுக்கும் தலா ஒரு லிட்டர் பால், 150 கிராம் பெடிகிரி, ஒரு முட்டை கொடுக்கப்படும். மாலை உணவு 6:30 மணிக்கு. தலா கால் கிலோ அரிசியில் மஞ்சள் கலந்த சாதம், அரை கிலோ இறைச்சி கொடுக்கப்படும். காய்கறிகளும் உண்டு. ‘கொலைப் பசி’யில் கிடந்தாலும், சாப்பாட்டை தட்டில் வைத்த உடன் நாய்கள் சாப்பிடு வதில்லை. தனது கையாளுனரின் கட்டளைக்காக காத்திருக்கும். அவரது அனுமதி கிடைத்ததும்தான் அவை ‘வெளுத்துக்கட்ட’ துவங்குகின்றன.

Leave a Reply

Your email address will not be published.