சென்னை சூளைமேட்டில் சந்தேக புத்தியால் மனைவியை குத்திக் கொன்ற கணவனை பொதுமக்கள் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.
சூளைமேடு, அண்ணா நெடும்பாதை கண்ணகி தெருவில் வசிப்பவர் ஷெனு (37), கார் டிரைவராக பணியாற்றுகிறார். இவரது மனைவி ஷாலினி (29). தனியார் மருத்துவமனையில் நர்ஸாகப் பணியாற்றி வந்தார். இவர்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். கணவன், மனைவி இருவரும் கேரளாவைச் சேர்ந்தவர்கள்.
டிரைவர் வேலை பார்த்து வந்த ஷெனு கடந்த ஒரு மாதகாலமாக வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். குடும்பச் செலவுகள் அனைத்தும் மனைவி ஷாலினி தலையிலேயே விழுந்துள்ளது.
இதனால் கடந்த ஒரு மாதகாலமாக தம்பதிகளுக்குள் அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. கணவனான தன்னை மனைவி மதிக்கவில்லை என்று ஷெனுவுக்கு கடுமையான ஆத்திரம் ஏற்பட்டுள்ளது. கூடவே சந்தேகமும் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று மாலை வேலையை விட்டுத் திரும்பிய ஷாலினியுடன் ஷெனு மீண்டும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
பின்னர் ஷாலினியைக் கோபத்தில் தாக்கியவர் ஒரு கட்டத்தில் கத்தியால் குத்தியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே ஷாலினி உயிரிழந்தார். ஷாலினியின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் கணவர் ஷெனுவைப் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.
ஷாலினியின் உடலை மீட்ட போலீஸார் பிரேதப் பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கணவனே மனைவியைக் கொலை செய்து சிறைக்குச் சென்றதால் இரண்டு ஆண் குழந்தைகளும் கவனிப்பார் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.