Police Department News

புளியங்குடி: `குடிக்காமல் இருக்க முடியவில்லை’- டாஸ்மாக் சுவற்றில் துளையிட்டு திருட முயன்ற நபர் கைது

புளியங்குடி: `குடிக்காமல் இருக்க முடியவில்லை’- டாஸ்மாக் சுவற்றில் துளையிட்டு திருட முயன்ற நபர் கைது

டாஸ்மாக் கடையின் உள்ளே நுழைந்து குடித்து விட்டு, பாட்டில்களை மூட்டை கட்டி தூக்கிச் செல்ல முயற்சி செய்த திருடனை போலீஸார் கைது செய்து அவரிடம் இருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்தார்கள்.

கொரோனா பெருந்தொற்றின் ஆபத்தில் இருந்து மக்களைக் காக்கும் வகையில் தளர்வுகளற்ற ஊரடங்கை தமிழக அரசு அறிவித்து செயல்படுத்தி வருகிறது. அதனால் அத்தியாவசிய தேவைக்கான கடைகள் தவிர பிற கடைகள் அடைக்கப்பட்டுள்ளன
டாஸ்மாக் மதுபானக் கடைகள் அனைத்தும் மூடப்பட்டுக் கிடக்கின்றன. அதனால் மது கிடைக்காததால் ஏற்பட்ட மன உளைச்சலில், போதைக்கு அடிமையான சிலர் வீடுகளிலேயே கள்ளச்சாராயம் காய்ச்ச முயற்சி செய்து கைது செய்யப்பட்ட சம்பவங்கள் சில இடங்களில் நடந்து வருகின்றன.தென்காசி மாவட்டம் புளியங்குடி பகுதியில் உள்ள டாஸ்மாக் மதுபான கடையில் 23-ம் தேதி யாரோ மர்ம நபர் சுவரில் துளையிட்டு உள்ளே நுழைய முயற்சி செய்துள்ளார். அந்தப் பகுதியில் போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்ததால் சுவரில் பாதி துளையிட்ட நிலையில் திருட வந்த மர்ம நபர் தப்பியோடிவிட்டார்.அதனால் புளியங்குடி பகுதியில் போலீஸ் பாதுகாப்பை அதிகரித்து தென்காசி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுகுணா சிங், கூடுதல் கண்காணிப்பாளர் சுவாமிநாதன் ஆகியோர் நடவடிக்கை எடுத்தார்கள். அதன்படி, டாஸ்மாக் கடைகள் ஆள்நடமாட்டம் இல்லாத பகுதிகளில் இருந்தால் அங்கு போலீஸாரின் ரோந்தை அதிகரித்து உத்தரவிடப்பட்டது.
புளியங்குடி பாம்புக்கோவில் சந்தை பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையின் சுவரில் மீண்டும் ஒரு மர்ம நபர் துளையிட்டு உள்ளே நுழைந்துள்ளார். அந்தக் கடையின் உள்ளே சென்றவர் அங்கிருந்த மது பாட்டில்களை எடுத்து அளவுக்கு அதிகமாகக் குடித்துள்ளார். கடையின் உள்ளே சத்தம் கேட்பதை அங்கு ரோந்துப் பணியில் இருந்த போலீஸார் கேட்டுள்ளனர்.அதனால் அந்தக் கடையைச் சுற்றிலும் வந்து பார்த்தபோது அங்குள்ள சுவரில் துளையிடப்பட்டிருந்தது. அதன் வழியாகப் பார்த்தபோது இளைஞர் ஒருவர் குடிபோதையில் மது பாட்டில்களை அள்ளிக்கொண்டிருந்ததைக் கண்டனர். அவரை வெளியே வரவழைத்து விசாரித்தபோது புளியங்குடியைச் சேர்ந்த கார்த்திக் என்பது தெரியவந்தது.
போலீஸ் விசாரணையில், “வேலை எதுவும் செய்யாமல் ஊர் சுற்றிக் கொண்டிருந்த நான் வீட்டில் பணத்தைத் திருடி தினமும் குடித்து வந்தேன். இப்போது குடிக்காமல் இருக்கமுடியவில்லை. இந்த டாஸ்மாக் கடை ஒதுக்குப்புறமாக இருந்ததால் சுவரில் துளையிட்டு உள்ளே நுழைந்து குடித்துவிட்டு பாட்டில்களைத் திருடினேன்” எனத் தெரிவித்துள்ளார். அவருக்கு வேறு ஏதேனும் திருட்டுச் சம்பவங்களில் தொடர்பு உண்டா என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published.