காவல்துறையினர் இல்லாமல் ஒரு மணி நேரம்கூட இருக்க முடியாது! உயர் நீதிமன்றம் கருத்து
உயர் நீதிமன்ற மதுரைக் கிளை
கரூரைச் சேர்ந்த காவலர் மாசிலாமணி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அதில்,“தமிழகக் காவல்துறையில் பணிபுரிபவர்கள் மழை, வெள்ளம், வெயில், போன்ற அனைத்து காலங்களிலும் தொடர்ந்து பணி செய்கிறோம். தமிழகத்தைப் பொறுத்தவரை 1,000 பேருக்கு 2 பேர் என்ற விகிதத்தில் மட்டுமே காவல்துறையினர் இருப்பதால், மிகவும் சிரமப்பட்டு பணி செய்கின்றனர். அதுவும் குறைந்த ஊதியத்தில் பணிபுரிந்துவருகின்றனர். ஆனால், பிற மாநிலங்களில் கூடுதலாக சம்பளம் வழங்கப்படுகிறது. தமிழகத்தில் போலீஸாருக்கு, வெறும் ரூ.18,000 முதல் 20,000 ரூபாய் வரை மட்டுமே ஊதியமாக வழங்கப்படுகிறது.
தமிழகத்தில் போலீஸாக நியமிக்கப்படும் 90 சதவிகிதத்தினர் அவர்களது வீட்டிலிருந்து, சொந்த ஊரிலிருந்து வெகுதொலைவிலேயே பணியில் நியமிக்கப்படுகின்றனர் அவர்களுக்கு வழங்கப்படும் இந்த மிகக் குறைந்த ஊதியம் அவர்களது வாழ்க்கை நடத்துவதற்குப் போதிய அளவில் இல்லாமல் இருக்கிறது. எனவே, தொடர்ந்து பணியில் ஈடுபடும் தமிழக போலீஸாரின் ஊதியத்தை உயர்த்தித் தர வேண்டும். அதேபோல் போலீஸாரின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில் காலிப் பணியிடங்களை நிரப்ப உத்தரவிட வேண்டும்’’ என மனுவில் தெரிவித்திருந்தார்