புகார் மனுக்களை உயர் போலீஸ் அதிகாரிகள் நேரடியாக பெற வேண்டாம்: உயர் நீதிமன்றம் உத்தரவு
பொதுமக்கள் அளிக்கும் புகார் மனுக்களை உள்ளூர் காவல் நிலையங்களிலேயே முதலில் அளிக்க வேண்டும். புகார்களை நேரடியாக பெற வேண்டாம் என உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
இந்திய சட்டப்படி தெளிவாக குற்றம் என அறியக்கூடிய வகையில் சில குற்றங்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளன. அவற்றை செய்தவர்களை பிடி ஆணை (வாரன்ட்) இல்லாமல் போலீஸாரால் கைது செய்ய முடியும். அத்தகைய உடனடியாக நடவடிக்கை எடுக்கத்தக்க குற்றங்கள் (Cognizable offence) தொடர்பான புகார்களில் புகார் மனுவை பெறும் காவல் துறை அதிகாரி உடனடியாக வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. ஆனால் ஒரு வழக்கில் 11 நாள்கள் காலதாமதமாக வழக்கு பதிவு செய்துள்ளதை நீதிபதி கண்டித்துள்ளார்.
குற்ற வழக்கில் முன் ஜாமீன் கோரி ஒருவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீது விசாரணை நடத்திய நீதிபதி எஸ்.நாகமுத்து, அந்த நபருக்கு முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
அதே நேரத்தில் பொதுமக்கள் அளிக்கும் புகார் மனுக்களை யார் பெற வேண்டும் என்பது தொடர்பாக விரிவான அறிவுரைகளை அந்த உத்தரவில் நீதிபதி வழங்கியுள்ளார்.
நீதிபதி தனது உத்தரவில் கூறியுள்ளதாவது: இந்த வழக்கு தொடர்பான புகார் மனு 22.11.2013 அன்று சென்னை மாநகர காவல் ஆணையரிடம் அளிக்கப்பட்டுள்ளது. அந்த மனு சம்பந்தப்பட்ட காவல் நிலையத்துக்கு 3.12.2013 அன்று அனுப்பி வைக்கப்பட்டு, அதன் பின்னர் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தன் அதிகார வரம்புக்கு உள்பட்ட பகுதியில் நடைபெறும் ஒரு குற்றம் தொடர்பான புகார் மனுவை பெறுவதற்கு மாநகர காவல் ஆணையருக்கு அதிகாரம் உள்ளது. ஆனால் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி நடவடிக்கை எடுக்கக் தகுந்த குற்றம் தொடர்பான புகார் என்றால், அந்த புகார் மனு யாரிடம் அளிக்கப்படுகிறதோ, அந்த அதிகாரிதான் அது தொடர்பாக வழக்குப் பதிவு செய்ய வேண்டும். அவ்வாறு வழக்குப் பதிவு செய்யாவிட்டால் அந்த அதிகாரி தண்டிக்கப்படலாம்.
வழக்குப் பதிவு செய்த பின் புலன் விசாரணைக்காக வேறு அதிகாரிகளுக்கு அதனை மாற்றலாம். எனினும் புகாரைப் பெற்று, வழக்குப் பதிவு செய்த அதிகாரிதான் நீதிமன்ற விசாரணையின்போது வழக்கு தொடர்பான விவரங்களை விளக்க வேண்டியிருக்கும். ஆகவே, புகார் அளிக்க வரும் பொதுமக்களை அந்தந்தப் பகுதியில் உள்ள உள்ளூர் காவல் நிலையங்களுக்குச் சென்று புகாரை அங்கு அளிக்குமாறு காவல் துறை உயர் அதிகாரிகள் அறிவுறுத்த வேண்டும். உள்ளூர் காவல் நிலையத்தில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனில், அதன் பிறகு உயர் அதிகாரிகளை பொதுமக்கள் அணுகலாம்.
அவ்வாறு இல்லாமல் நேரடியாக உயர் அதிகாரிகள் புகார்களைப் பெற்றால், உள்ளூர் காவல் நிலையங்களின் மீதான மக்களின் நம்பிக்கை குறைந்து விடும். உயர் அதிகாரிகளை நேரடியாகச் சந்தித்து புகார்களை அளித்தால்தான் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற எண்ணம் வலுப்பெறும். சினிமா நட்சத்திரங்கள் போன்ற முக்கியப் பிரமுகர்கள் உயர் அதிகாரிகளை நேரடியாகச் சந்தித்து புகார் மனுக்களை அளிப்பதும், உடனே ஊடகங்களிடம் புகார் தொடர்பாக விளக்கு வதும் நடைபெறுகின்றன.
இது போன்ற நிகழ்வுகள் விளம்பரம் தேடித் தர உதவலாமே தவிர, உண்மையான நோக்கம் நிறைவேற உதவாது. மாறாக, குற்றவாளிகள் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிச் செல்வதற்கே உதவி செய்யும். ஆகவே, உடனடியாக நடவடிக்கை எடுக்கத் தகுந்த குற்றங்கள் தொடர்பான புகார்களை முதலில் உள்ளூர் காவல் நிலையங்களிலேயே அளிக்கும் வகையில் பொதுமக் களுக்கு தமிழகக் காவல் துறை உயர் அதிகாரிகள் உரிய விழிப்புணர்வை ஏற்படுத்துவார்கள் என நம்புகிறேன் என்று நீதிபதி தனது உத்தரவில் கூறியுள்ளார்.