மதுரை மாநகர் காளவாசல் பைபாஸ் சாலையில் இன்று முதல் போக்கு வரத்து மாற்றம்
மதுரை மாநகர் பைபாஸ் சாலையில் உள்ள காளவாசல் சந்திப்பில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக உயர்மட்ட மேம்பாலம் அமைக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இச்சந்திப்பிற்கு வரும் பெரும்பாலான வாகனங்கள் உயர்மட்ட பாலத்தை பயன்படுத்தாமல் தொடர்ந்து மேம்பாலத்தின் கீழ் பகுதியினையே பயன்படுத்துவதால் காளவாசல் சந்திப்பில் போக்குவரத்து நெரிசல் தொடர்ந்து இருந்து வருகின்றது. மேலும் இச்சந்திப்பினில் பழங்காநத்தத்திலிருந்து குரு தியேட்டர் செல்லும் பேருந்துகளும் குரு தியேட்டரில் இருந்து பழங்காநத்தம் செல்லும் பேருந்துகளும் உயர்மட்ட மேம்பாலத்தினில் சென்று வராமல் தொடர்ந்து மேம்பாலத்தின் கீழ் பகுதியிலேயே சென்று வருகின்றது. இந்த போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வண்ணம் காளவாசல் சந்திப்பினில் உயர்மட்ட மேம்பாலத்தின் கீழ் குரு தியேட்டரில் இருந்து வரும் வாகனங்கள் பழங்காநத்தம் பகுதிக்கு செல்ல இயலாத வகையிலும் பழங்காநத்தம் பகுதியிலிருந்து குரு தியேட்டர் செல்ல இயலாத வகையிலும் சிக்னல்கள் மாற்றப்பட்டுள்ளது.04.10.2021 தேதி முதல் சிக்னல் அமைப்பு மாற்றி அமைக்கப்படுகின்றது.04.10.2021 முதல் குரு தியேட்டரில் இருந்து உயர்மட்ட பாலத்தின் கீழ் வரும் வாகனங்கள் இடதுபுறம் திரும்பி அரசரடிக்கும் வலதுபுறம் திரும்பி முடக்கு சாலைக்கும் (தேனி ரோடு ) மட்டுமே செல்ல இயலும். அதுபோல பழங்காநத்தம் சந்திப்பில் இருந்து வரும் வாகனங்கள் உயர்மட்ட பாலத்தின் கீழ் வலது புறம் திரும்பி அரசரடிக்கும். இடது புறம் திரும்பி தேனி சாலைக்கும் மட்டுமே செல்ல இயலும். இச்சாலையில் செல்லும் பேருந்துகளும் இது போன்று உயர்மட்ட பாலத்தில் மட்டுமே குரு தியேட்டர் சந்திப்பில் இருந்து பழங்காநத்தம் மற்றும் பழங்காநத்தம் சந்திப்பில் இருந்து குரு தியேட்டர் செல்ல இயலும். காளவாசல் சந்திப்பில் உள்ள பேருந்து நிறுத்தங்களுக்கு இப் பேருந்துகள் இனி வந்து செல்லாது. பாலத்தின் கீழ் இயங்கி வரும் பேருந்து நிறுத்தங்கள் சொக்கலிங்க நகர் மற்றும் குருதியேட்டர் பேருந்து நிறுத்தங்களுக்கு மாற்றப்பட்டுள்ளது. பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் இம் மாறுதலுக்கு ஒத்துழைப்பு வழங்க மதுரை மாநகர் போக்குவரத்து காவல் துறை சார்பாக இதன் மூலம் கேட்டுக் கொள்ளப்படுகின்றது