Accidents

லாரி மோதி தலைமைக் காவலர் பலி: மோட்டார் சைக்கிள் பள்ளத்தில் இடறியதில் விபரீதம்

சென்னை எம்.கே.பி. நகர் அருகே சாலையில் இருந்த பள்ளத்தால், இருசக்கர வாகனத்தில் சென்ற தலைமைக் காவலர் தவறி விழுந்தார். பின்னால் வேகமாக வந்த குப்பை லாரி அவர் மீது ஏறியது. இதில் சம்பவ இடத்திலேயே தலைமைக் காவலர் உயிரிழந்தார்.

சென்னை மகாகவி பாரதியார் நகர் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகவும், நுண்ணறிவுப் பிரிவிலும் பணியாற்றி வந்தவர் பழனிகுமார் (45). மதுரை மாவட்டம், மேலவளவு பகுதியைச் சேர்ந்த இவர் சென்னை பரங்கிமலை காவலர் குடியிருப்புப் பகுதியில் வசித்து வந்தார். நேற்று அவரது பணி முடிய நள்ளிரவு ஆகிவிட்டது.

பணி முடிந்த பின், பழனிகுமார் காவல் நிலையத்திலிருந்து பரங்கிமலையில் உள்ள தனது குடியிருப்புக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். எஸ்.எம்.நகர் நகர் பிரதான சாலை- சென்ட்ரல் அவின்யூ சாலை சந்திப்பில் மகாகவி பாரதியார் நகர் பேருந்து பணிமனை அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது சாலையின் நடுவே உள்ள பள்ளத்தில் இருசக்கர வாகனம் இறங்கியது. அதில் நிலை தடுமாறிய பழனிகுமார் சாலையில் விழுந்துள்ளார்.

அப்போது அந்த வழியாக வேகமாக வந்த மாநகராட்சி குப்பை ஏற்றும் லாரி, திடீரென சாலையில் விழுந்த பழனிகுமார் மீது ஏறாமல் இருக்க பிரேக் அடித்தும் முடியாமல் அவர் மீது ஏறி இறங்கியது. இதில் பழனிகுமார் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதுகுறித்துத் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கீழ்ப்பாக்கம் போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸார் உயிரிழந்த தலைமைக் காவலர் பழனிகுமார் உடலை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து உயிரிழப்பை ஏற்படுத்திய லாரி ஓட்டுநரைக் கைது செய்தனர்.

வடக்கு மண்டல கூடுதல் ஆணையர் தினகரன், மேற்கு மண்டல இணை ஆணையர், புளியந்தோப்பு துணை ஆணையர், வண்ணாரப்பேட்டை துணை ஆணையர், உதவி ஆணையர்கள், காவல் ஆய்வாளர்கள் மற்றும் போலீஸார் பழனிகுமார் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

போலீஸ் மரியாதைக்குப் பின் அவரது உடல் ஆம்புலன்ஸ் மூலம் சொந்த ஊருக்கு அனுப்பப்பட்டது. சாலையில் தோன்றும் திடீர் பள்ளங்களை கான்கிரீட் கலவை கொண்டு சென்னை மாநகராட்சியினர் மூடி வந்தாலும் அது போதிய அளவில் இல்லை என்பது வாகன ஓட்டிகளின் புகாராக உள்ளது. அதிக அளவில் இருசக்கர வாகனங்களில் செல்பவர்களே பெரும்பாலும் சாலையில் உள்ள பள்ளங்களில் இடறி கீழே விழுவது வாடிக்கையாக உள்ளது.

போலீஸாரை இடமாற்றம் செய்யும்போது அவர்கள் பணியாற்றும் மண்டலத்தில் உள்ள ஸ்டேஷன்களில் இடமாற்றம் செய்வது அல்லது வேறு மண்டலத்துக்கு இடமாற்றம் செய்தால் ஸ்டேஷன்கள் அருகாமையில் உள்ள காவலர் குடியிருப்பில் இடம் ஒதுக்குவது நல்லது. காலநேரம் இல்லாமல் வேலை பார்க்கும் போலீஸார் பெரும்பாலும் இருசக்கர வாகனத்தில் பணி முடிந்து வெகுதூரம் உள்ள குடியிருப்புக்குப் பயணிக்கும்போது விபத்து ஏற்பட வாய்ப்பு அதிகம் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.