Police Department News

குற்றங்களில் ஈடுபடும் காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க சுதந்திரமான அமைப்பு தேவை- உயர்நீதிமன்றம்

குற்றங்களில் ஈடுபடும் காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க சுதந்திரமான அமைப்பு தேவை- உயர்நீதிமன்றம்

காவல்துறையில் நடைபெறும் லாக்கப் மரணம், விசாரணை கைதிகளுக்கு எதிரான சித்ரவதை போன்ற புகார்களை விசாரிக்க அனைத்து மாநிலங்களிலும் காவல்துறை புகார் ஆணையம் அமைக்க உச்சநீதிமன்றம் உத்தர விட்டிருந்தது.

ஆனால், இந்த உத்தரவுக்கு எதிராக தமிழ்நாட்டில் மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் விசாரணை ஆணையங்கள் அமைக்கப் பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் மக்கள் நீதி மய்யத்தின் நிர்வாகியும், ஓய்வு பெற்ற ஐ.ஜி.யுமான மவுரியா உள்பட பலர் வழக்கு தொடர்ந்தனர்.

மாநில அளவில் போலீசாருக்கு எதிரான புகாரை, போலீசாரே விசாரிக்கும் வகையில் ஆணையங்களை அரசு அமைத்துள்ளது உச்சநீதிமன்ற உத்தரவுக்கு எதிரானது என்று மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி, நீதிபதி என்.மாலா ஆகியோர் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர்கள் தரப்பில், 2018-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி சிறை மரணங்களில் தென் மாநிலங்களில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது, கடந்த 5 ஆண்டுகளில் போலீஸ் நிலையத்தில் 76 மரணங்கள் நிகழ்ந்துள்ளது, இதுகுறித்து தொடரப்பட்ட வழக்குகளில், ஒரு வழக்கில் கூட குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்கவில்லை என்றும் வாதிடப்பட்டது.

தமிழக அரசு தரப்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் ஆர்.சண்முகசுந்தரம், தமிழக அரசின் உள்துறை செயலாளர்தான் மாநில அளவிலான குழுவுக்கு தலைமை வகிக்கிறார், அவர் காவல்துறைக்கு அப்பாற்பட்டவர், இதில் எந்த தவறும் இல்லை, தமிழ்நாடு மட்டுமின்றி பஞ்சாப், சத்தீஸ்கர், அரியானா போன்ற பல மாநிலங்களில் ஓய்வுபெற்ற நீதிபதிகள் இல்லாமல் புகார் ஆணையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன என்றும் விளக்கம் அளித்தார்.

இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடும் போலீசாரின் மீது கடும் நடவடிக்கை எடுக்க சுதந்திரமான அமைப்பு கண்டிப்பாக தேவை, உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்படி விசாரணை ஆணையம் அமைத்தால்தான் சிறப்பாக இருக்கும் என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.

இந்த ஆணையம் பிறப்பிக்கும் உத்தரவுகளை அரசுக்கு எதிரான ஒன்றாக பார்க்காமல், சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகளுக்கு எதிரானதாக பார்க்க வேண்டும், இந்த விஷயத்தில் தமிழக அரசே நல்ல முடிவு எடுத்து முறையான புகார் ஆணையத்தை அமைக்கும் என நம்புகிறோம் என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

சமீபத்தில் நடந்த விசாரணை கைதி விக்னேசின் லாக் அப் மரணம் தொடர்பாக கூட உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிக்க வேண்டும் என கடிதம் வந்தது. ஆனால் முதலமைச்சர் உடனடியாக நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்ட போலீசார் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டதால், நாங்கள் அந்த விஷயத்தில் தலையிடவில்லை என்று கூறிய நீதிபதிகள் விசாரணையை வருகிற 24-ந்தேதிக்கு தள்ளி வைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published.