இராமநாதபுரம் பிப்ரவரி 2
தீரன் திரைப்படத்தில் ஒரு துப்பாக்கி தோட்டாவை வைத்து மொத்த திருட்டு கும்பல் நெட்வொர்க்கையே பிடிப்பது போல, ஒரு துண்டு சீட்டை வைத்து ஆந்திர மாநில திருட்டு கும்பலை பிடித்துள்ளனர் தமிழக போலீசார்.
ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த ஒரு பெண்ணின் வீட்டில் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த பஞ்சு, சுமதி என்ற இரு பெண்கள் வாடகைக்கு வசித்துவந்துள்ளனர்.
இவர்களுடன் வாடகைக்கு வீடு கொடுத்த பெண் உறவினர்கள் போல அன்னியோன்னியமாகப் பழகியுள்ளார். நாள்கள் செல்லச் செல்ல இவர்களிடையே நட்பு பலப்பட வாடகைக்குக் குடியிருந்த இருவரையும் வீட்டுக்குள்ளேயே அழைத்து உட்கார வைத்துப் பேசுவது, அவர்களுக்கு உணவு அளிப்பது என அதீதப் பாசம் காட்டியுள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் கார் விற்ற பணம் ரூபாய் 2.5 லட்சத்தை பீரோவில் வைக்கச்சென்றவர் பீரோவை சரிவரப் பூட்டவில்லை.
அப்போது தண்ணீர் லாரி வந்த காரணத்தால் வெளியில் சென்றுள்ளார் அந்த பெண். தண்ணீர் எடுத்துவிட்டு வீடு திரும்பிய போது, பணம் வைத்திருந்த பீரோ திறந்து கிடப்பதையும் அதிலிருந்த 5.5 சவரன் நகை மற்றும் ரொக்கப்பணம் இரண்டரை லட்சம் ரூபாய் திருடு போயிருப்பதையும் அறிந்து அதிர்ச்சியடைந்தார்.
மேலும் அந்த இரண்டு பெண்களும் தங்களது உடமைகளை எடுத்துக்கொண்டு வீட்டிலிருந்து மாயமாகியிருப்பதையும் அறிந்த பாக்கியம், உடனடியாக போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தார்.
சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீஸார், பணம் திருட்டுப் போனது குறித்தும், வாடகை வீட்டில் குடியிருந்த ஆந்திரப் பெண்கள் குறித்தும் விசாரணை நடத்தினர்.
திருட வந்த பெண்கள் தங்கியிருந்த வீடு முழுவதும் சோதனையிட்டதில் 10 இலக்க எண் கொண்ட ஒரு துண்டுச் சீட்டு மட்டுமே கிடைத்தது.
இந்தத் துண்டுச் சீட்டினை வைத்து விசாரணையில் இறங்கிய போலீஸார் இறுதியாக அது ஆந்திரா மாநிலத்தைச் சேர்ந்த ஒரு வங்கிக் கணக்கு எண் எனக் கண்டறிந்தனர்.
அதன் அடிப்படையில் அந்த வங்கி எண்ணில் குறிப்பிடப்பட்டிருந்த முகவரியான ஆந்திர மாநிலம் குடுபிடி மாவட்டம் சேத்தன்னப்பள்ளி பகுதிக்கு விரைந்தனர்.
பின்னர் அங்கிருந்த போலீஸார் உதவியோடு அப்பகுதியில் இருந்த திருட்டில் ஈடுபட்ட இருவரையும் கண்டறிந்தனர். அவர்களை விசாரணை எனக் கூறி சேத்தன்னப்பள்ளி காவல்நிலையத்துக்கு அழைத்து வந்ததோடு மட்டும் அல்லாமல் திருட்டு போன அனைத்தையும் மீட்டு ராமநாதபுரத்தை சேர்ந்த பெண்ணிற்கு கொடுத்துள்ளனர். குற்றபிரிவு சார்பு ஆய்வாளர் அண்ணன் #ஜோதிமுருகன் தலைமையிலான காவல்துறையின் இந்த துணிச்சலான செயலை அனைத்து தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்…..
போலீஸ் இ நியூஸ் செய்தியாளர் திரு. சந்தோஷ் சென்னை