Police Department News

மதுரை செல்லூர் பகுதியில் சுமை தூக்கும் தொழிலாளி கொலையில் 3 பேர் கைது

மதுரை செல்லூர் பகுதியில் சுமை தூக்கும் தொழிலாளி கொலையில் 3 பேர் கைது

மதுரை செல்லூர் மேலத்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் பிச்சைமணி (வயது 33). சுமை தூக்கும் தொழிலாளியான இவர் நேற்று இரவு தனது நண்பர் மதனுடன் செல்லூர் சிவன் கோவில் தெரு அருகே பேசிக் கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த 3 பேர் கும்பல் பிச்சைமணி, நண்பர் மதனை ஆகியோரை அரிவாள் மற்றும் கத்தியால் சரமாரியாக வெட்டியது. இதில் பிச்சைமணி படுகாயமடைந்தார். அவரை அந்தப்பகுதியைச் சேர்ந்தவர்கள் மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக இறந்தார். தொழிலாளி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தால் செல்லூரில் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த செல்லூர் D2 காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.

பிச்சைமணியை கொன்றவர்கள் யார்? எதற்காக கொலை செய்தார்கள்? என்று விசாரணை நடத்தப்பட்டது. மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார், துணை கமிஷனர் மோகன்ராஜ் உத்தரவின் பேரில் உதவி கமிஷனர் விஜயகுமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில் கொலையாளிகள் குறித்தும், கொலைக்கான காரணம் பற்றியும் தகவல்கள் வெளியாகின.

பிச்சைமணிக்கு அபிதா தேவி என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். தாய் செல்வி மற்றும் மனைவி- குழந்தைகளுடன் ஒரே வீட்டில் வசித்து வந்தார். பிச்சைமணியின் தாய்மாமன் தங்கப்பாண்டி. அவருக்கும் செல்லூர் புதுத்தெருவைச் சேர்ந்த காசிமாயன் என்பவரின் குடும்பத்தினருக்கும் இடையே முன் விரோதம் இருந்து வந்தது.

கடந்த 18-ந் தேதி அவர்களுக்கு இடையே முன் விரோதம் காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது தங்கபாண்டிக்கு ஆதரவாக பிச்சைமணி செயல்பட்டுள்ளார். இதனால் தங்கப்பாண்டி மற்றும் பிச்சைமணி மீது காசிமாயனுக்கு ஆத்திரம் ஏற்பட்டது.

அவர்களை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். காசிமாயனுக்கு ஆதரவாக அவரது மகன் கார்த்திக் (29), கீழத்தோப்பு கவின் என்ற கவியரசு வயது (32), செல்லூர் பூந்தமல்லி நகர் கல்யாணசுந்தரம் தெருவை சேர்ந்த லட்சுமணன் (34) ஆகியோர் இருந்துள்ளனர்.

நேற்று இரவு பிச்சை மணியை செல்போனில் கவின் தொடர்பு கொண்டு சமரசம் பேசலாம் என்று கூறி அழைத்துள்ளார். அதன்படி பிச்சைமணி தனது நண்பரான மதனுடன் செல்லூரில் உள்ள சிவன் கோவில் தெருவுக்கு சென்று காத்திருந்தனர்.

அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த கார்த்திக், கவின், லட்சுமணன் ஆகிய 3 பேரும் திடீரென தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாள் மற்றும் கத்தியால் பிச்சைமணி, மதனை சரமாரியாக வெட்டினர். இதில் காலில் பலத்த வெட்டுக்காயம் அடைந்த மதன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

இந்த நிலையில் வீட்டில் இருந்து சென்ற பிச்சைமணியை தேடி அவரது தாய் செல்வி வந்தார். அவரது கண் முன்னே பிச்சைமணியை 3 பேரும் சுற்றி வளைத்து நின்று வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். பின்பு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் பிச்சைமணி இறந்து விட்டார்.

மேற்கண்ட தகவல்கள் போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து கார்த்திக், கவின், லட்சுமணன் ஆகிய 3 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிந்து கைது செய்தனர். முன் விரோதம் காரணமாகவே பிச்சைமணியை வெட்டிக் கொன்றதாக அவர்கள் போலீசில் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

அரிவாள் வெட்டில் காயமடைந்த பிச்சை மணியின் நண்பரான மதன் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Leave a Reply

Your email address will not be published.