மதுரையில் ஆட்டோவில் வந்த வியாபாரியை தாக்கி பணம் பறித்த ஆட்டோ டிரைவர் கைது
மதுரை வில்லாபுரம், வீட்டு வசதி வாரிய குடியிருப்பு காலனியைச் சேர்ந்த அப்துல் கனி மகன் அப்துல் நாசர் (வயது 21). இவர் வில்லாபுரத்தில் கார்மெண்ட்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார்.
நேற்று இரவு இவர் வெளியூருக்கு சென்று விட்டு வசூல் பணத்துடன் மாட்டுத்தாவணிக்கு வந்தார். அங்கிருந்து ஆட்டோவில் வீட்டுக்கு புறப்பட்டார். அப்துல் நாசரிடம் பணம் இருப்பது டிரைவருக்கு தெரிய வந்தது. அந்தப் பணத்தை பறிக்க முடிவு செய்தார்.
வில்லாபுரத்தில் இருள் மறைவான பகுதியில் ஆட்டோவை நிறுத்திய டிரைவர், அப்துல் நாசரிடம், பணத்தை கொடு என்று மிரட்டினார். அப்துல் நாசர் மறுக்கவே, ஆத்திரம் அடைந்த ஆட்டோ டிரைவர் அவரை தாக்கினார்.
காயம் அடைந்த அப்துல் நாசர் கீழே விழுந்தார். அவரது பேண்ட் பாக்கெட்டில் இருந்த ரூ.17 ஆயிரத்து 500-ஐ, ஆட்டோ டிரைவர் பறித்துக் கொண்டு தப்பி விட்டார். காயங்களுடன் கிடந்த அப்துல் நாசரை அக்கம் பக்கத்தினர் மீட்டு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதில் தொடர்புடைய குற்றவாளியை கைது செய்ய வேண்டும் என்று மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில் குமார் உத்தரவிட்டார். மாநகர தெற்கு துணை கமிஷனர் சீனிவாச பெருமாள் மேற்பார்வையில், தெற்கு வாசல் உதவி கமிஷனர் சண்முகம் ஆலோசனையின் பேரில், ஜெய்ஹிந்த்புரம் இன்ஸ்பெக்டர் சந்தனமாரி, சப்-இன்ஸ்பெக்டர் தமிழ் திருவாசகம், போலீஸ்காரர்கள் கண்ணு, துரைமுருகன் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் அப்துல் நாசரிடம் விசாரணை நடத்தினர். மேலும் மாட்டுத்தாவணி பஸ் நிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமிரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.
இதையடுத்து வியாபாரி அப்துல்நாசரிடம் பணத்தை வழிப்பறி செய்த ஆட்டோ டிரைவர், வில்லாபுரம், வீட்டு வசதி வாரிய குடியிருப்பு காலனியை சேர்ந்த பொன் அருள் (32) என்பவரை போலீசார் கைது செய்தனர்.