மதுரையில் செல்போன் பறித்த சிறுவன் உள்பட 2 பேர் கைது
செல்போன் பறித்த சிறுவன் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
போலீசார் நரிமேடு, செல்லூரில் பதுங்கி இருந்த 2 பேரை பிடித்து, காவல் நிலையத்தில் விசாரணை நடத்தினர்.
மதுரை ராஜாக்கூரை சேர்ந்தவர் சாமிநாதன் (வயது 24). இவர் அனுப்பானடியில் மாநகராட்சி துப்புரவு பணியாளராக உள்ளார்.
நேற்று மதியம் இவர் உறவுக்கார பெண்ணுடன் கே.கே.நகர் பூங்காவில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார். அங்கு மோட்டார் சைக்கிளில் 3 பேர் வந்தனர்.
அவர்கள் சாமிநாதனிடம், ‘சட்டை பையில் இருக்கும் பணத்தை கொடு, இல்லை என்றால் குத்தி கொன்று விடுவேன்’ என்று மிரட்டினர். சாமிநாதன் பணம் தர மறுத்தார். ஆத்திரம் அடைந்த 3 பேரும் அவரை தாக்கி செல்போனை பறித்து தப்பினர்.
இதில் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்று மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவிட்டார். இதன்படி மாநகர வடக்கு துணை கமிஷனர் மோகன்ராஜ் மேற்பார்வையில், அண்ணாநகர் உதவி கமிஷனர் சூரக்குமார் ஆலோசனையின் பேரில், மாட்டுத்தாவணி இன்ஸ்பெக்டர் ராஜாங்கம், சப்-இன்ஸ்பெக்டர் வெள்ளத்துரை அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு காமிரா பதிவுகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர்.
அதன் அடிப்படையில் போலீசார் நரிமேடு, செல்லூரில் பதுங்கி இருந்த 2 பேரை பிடித்து, காவல் நிலையத்தில் விசாரணை நடத்தினர். அவர்கள் நரிமேடு செந்தில்வேல் மகன் வீராசாமி (23), செல்லூர், சுயராஜ்யபுரம் தெருவை சேர்ந்த 17 வயது சிறுவன் என்பது தெரிய வந்தது.
இருவரையும் போலீசார் கைது செய்தனர். தப்பி ஓடிய சூர்யாவை தேடி வருகின்றனர்